ஆவண விழிப்புணர்வை உருவாக்க இந்த வரைகலைப் படைப்பு ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை கருத்தில் கொள்க. கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூழல் ஏறத்தாள அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் பொதுவானவை.
இந்த “தமிழீழத்தின் பீனிக்ஸ் பறவை” (DsporA Tamil Archive ஆல் வழங்கப்பட்ட தலைப்பு) ஒரு வரைகலைப் படைப்பு ஆகும். இது தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே (த.இ.அ. நோர்வே/ TYO Norway) நவம்பர் 2009 இல் வெளியிட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் பல கிழைகளைக் கொண்டுள்ளது. அதோடு இரண்டாம் தலைமுறை புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த அமைப்பு, இப்போது மூன்றாம் தலைமுறையினரையும் உள்ளாங்குகின்றது. இந்த வரைகலை தமிழீழத்திலிருந்து (1) உயரும் ஒரு பீனிக்ஸ் பறவை எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியதை வடிவமைப்பாளர், கிரி திருணாவுக்கரசுக் கூறினார். வடிவமைப்பாளருடனான தகவற்தொடர்பு அடிப்படையில், இந்த கலைப்படைப்பு ஈழத் தமிழர்களின் வரலாற்றின் பல்வேறு பரிணாமங்களை அல்லது கருத்தியல்பை வெளிப்படுத்த முடியும் என்றார்.

TYO, குறிப்பாக நோர்வேயில் உள்ள உள்ளூர் கிளையான, துரண்யம் என்ற அடையாளத்தைக் கொண்ட பீனிக்ஸ் வரைகலை மேலே உள்ளது. இந்த வரைகலைப் படைப்பு கிரி திருணாவுக்கரசின் முகநூல் பக்கத்தில் எடுக்கப்பட்டது. இருப்பினும், இவ்வாறான படைப்புகள் TYO நோர்வேயின் நிறுவன ஆவணத்தில் (organisational archive) ஆவணப்படுத்திப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இந்த தமிழீழத்திலிருந்து உயரும் ஒரு பீனிக்ஸ் பறவை வரைகலை கடந்த 11 ஆண்டுகளில் ஏனைய தமிழர்களால் மீள் பயன்பாட்டிற்று உள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்த வரைகலைப் படைப்பு TYO நோர்வேயால் முதல்முறியாக வெளியிடப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த வரைகலைப் படைப்பு TYO நோர்வேக்காக கிரி திருணாவுக்கரசு வடிவமைத்தார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இது தமிழ் படைப்பாளிகள் மற்றும் தமிழ் அமைப்புகளில் உள்ள பொதுவான நிலைமைகள். நிறுவன ஆவணம் (organisational archive) உருவாக்குவதற்கான எதிர்கால தேவை மற்றும் நோக்கம் பற்றி போதிய புரிதல் இல்லாமை உள்ளது.
ஒரு படைப்பை, வெளியீட்டை அல்லது செயற்பாட்டை செய்தவுடன் அதற்கு ஒரு தலைப்பையோ அல்லது உரிமை கோரல் அடையாளத்தைக் கொடுப்பதில் அக்கறை கொள்வதில்லை. இது எமது தொண்டு மற்றும் தமிழ் சமுதாயத்திற்கு பங்களிக்கும் தாராள மனப்பான்மையின் விளைவாக உருவாகும் ஒரு பொதுவான போக்கு. இப்போக்கினால் நபர் அல்லது அமைப்பைக் காட்டிலும் தயாரிப்பு மற்றும் அது கூறும் செய்தி மீது கவனம் செலுத்தப்படும் என்று நினைப்பதுண்டு. சுய விளம்பரம் அல்லது பெருமையை தவிர்ப்பதற்கான செயற்பாடாகப் பார்க்கலாம். ஒரு தயாரிப்பு, செயற்பாடு அல்லது செயல்முறையின் தோற்றத்தைக் குறிப்பிடுவதை அறிந்தோ அல்லது அறியாமலோ தவிர்க்கப்படுகின்றது. இதன் மற்றொரு அம்சம், ஒரு வெளியீடு என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டில் உள்ள ஒரு அமைப்பு அல்லது அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு புலம்பெயர் தமிழருக்குமானது என்ற மனநிலை அடிப்படையாக உள்ளது. இந்த நடைமுறை தன்னார்வத் தொண்டுப் பணியில் ஈடுபடும் அனைத்துத் தமிழ் படைப்பாளிகளுக்கும் மற்றும் அமைப்புகளுக்கும் பொருந்தும். நிறுவன ஆவணத்தை (organisational archive) உருவாக்காததற்கு மற்றும் ஒரு முக்கிய காரணி, தனியார் நிறுவனங்கள் ஆவணம் உருவாக்க வேண்டிய சட்டரீதியிலான நிபந்தனை இல்லை. என்றாலும் அமைப்புகளால் மாதாந்த அறிக்கைகள் உருவாக்குவது வழக்கம். ஆனால் அந்த அறிக்கைகளின் நோக்கம் குறுகிய ஆயுட்காலம் கொண்டது. நிறைவுபெற்ற மாதத்தின் செயற்பாட்டை மேல் நிர்வாக மட்டத்திற்கு தெரிவிக்க அனுப்பப்பட்டதும், அந்த அறிக்கை உள்ளூர் நிறுவன மட்டத்தில் கவனிக்கப்படாமல் போகலாம். மேல் நிர்வாக மட்டத்திலும் இந்த வகையான ஆவணங்கள் ஆவணப்படுத்திப் பாதுகாக்கப்படாவிட்டால், உள்ளூர் செயல்பாட்டின் பதிவுகள் இழக்கப்படுகின்றன.
கிரி திருணாவுக்கரசு உடனான தகவல்தொடர்பு அடிப்படையில், DsporA Tamil Archive “தமிழீழத்தின் பீனிக்ஸ் பறவை” மற்றும் “Keep the flame alive” (DsporA Tamil Archiveஆல் வழங்கப்பட்ட தலைப்பு), ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை அடையாளம் கண்டது. இறுதியாகக் குறிப்பிட்ட வரைகலை கனடாவில் உள்ள தமிழர் ஒருவரால் அசல் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. இந்த வரைகலைக்குரிய வெளியீட்டு மாதம் மற்றும் ஆண்டு தெரியவில்லை, அத்துடன் படைப்பாளரும் வெளியீட்டாளரும் தெரியவில்லை. எவ்வாறாயினும், இந்த வரைகலை சமூக ஊடகங்களில் சுயவிவரப் படமாகப் (profile picture) பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலையை நினைவுகூற, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இவ்வரைகலை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. பொது மக்களின் இப்பயன்பாடு “Keep the flame alive” வரைகலையை சூழ்ந்திருக்கும் ஒரு வரலாற்றுப் பெறுமதியையும் மற்றும் சூழலையும் உருவாக்குகின்றது.
பிரதிகூலம்:
“ஆவணம் என்றால் என்ன? -5” எனும் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கூறுகளான, “தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்”, அறியாமலேயே அழிக்கப்படுகின்றது. குறிப்பாக எண்ணிம தயாரிப்புகளில் இந்த மூன்று கூறுகளையும் கண்காணிப்பது மிகவும் முக்கியமானது. அதாவது ஒரு தயாரிப்பு, செயற்பாடு மற்றும் செயல்முறையின் (product, activity and process) “தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்” கையாளப்படுவதைத் (manipulation) தடுப்பதாகும். எனவே, எண்ணிம பணித் தளத்தில் ஒரு மூலத்தை நகலெடுப்பது, மாற்றுவது மற்றும் கையாள்வது எளிது. இத்தகைய பதிவுகள் பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக இந்த மூன்று கூறுகளையும் கொண்டிருக்கவில்லை என்றால், ஒரு அமைப்பின் வரலாற்றுத் தொடர்ச்சியும் அதன் செயற்பாடுகளும் திரிக்கப்பட்டு, கலைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, இழக்கப்படலாம். வரலாற்றை இழக்கத் தொடங்கும் போது அல்லது வரலாற்றை இழந்த பின்னர் வரலாற்றைத் தேடுவது தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளிடையே உள்ள மற்றொரு பொதுவான போக்கு. ஒரு அமைப்பு மற்றும் ஒரு அமைப்பைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தின் வரலாறு மற்றும் உரிமைகளின் தொடர்ச்சியை அவர்களின் நிறுவன ஆவணம் மூலமே பாதுகாக்க முடியும்.
ஒரு அமைப்பின் ஆவணப் பொருட்களை சேகரிப்பது அவ்வமைப்பின் சமகால நிர்வாகக்குழுவில் பணி ஆகும். ஆனால் சேகரிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது ஆவணங்களை வைத்திருக்கும் அனைத்து முன்னாள் மற்றும் சமகால உறுப்பினர்ககளினதும் பொறுப்பாகும். ஏனெனில் அந்த ஆவணப் பொருட்கள் ஒரு அமைப்பின் சொத்தாகும். அதோடு அவை ஒரு சமூகத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆவணங்கள் ஆகும். இந்த நிலைமை நோர்வே தன்னார்வ அமைப்புகளுக்கும் பொதுவானது என்பது ஒரு ஆறுதலாக இருக்க இங்கு குறிப்பிடுகின்றேன். பொது அணுகல் மற்றும் பயன்பாடு இல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் இழந்த ஆவணங்களுக்குச் சமம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மேற்கோள்:
(1) TamilNet. (2008). Eezham Thamizh and Tamil Eelam: Understanding the terminologies of identity. Hentet fra https://www.tamilnet.com/art.html?catid=99&artid=27012
பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்கமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.
உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்டது: 18.10.2020
15 thoughts on “தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்: வரலாற்றுத் தொடர்ச்சி”