தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பாகம் 3: தொழில்நுட்ப அழிவிலிருந்து பேணிப் பாதுகாத்தல்

ஒரு மாவீரனின் கடிதம்

English

இன்று 27. கார்த்திகை 2020, மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கும் அப்பாவி மக்களுக்கும் வீரவணக்கங்கள். மாவீரர் நாள் தமிழரின் “Poppy Day”1 ஆகும்.

படம்: Wikipedia. கார்த்திகைப் பூ, தமிழீழத் தேசியப் பூ.

«தமிழீழ விடுதலைப் போராட்டம்». 1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரையிலான காலப்பகுதியை ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றுக் காலமாகக் கணிக்கலாம். இந்தக் காலப்பகுதியில், ஈழத் தமிழர்கள் சம உரிமை, சம வாய்ப்பு, சுய நிர்ணய உரிமை, பேச்சுச் சுதந்திரம், தகவல் சுதந்திரம், தமது தாயகம், மொழி, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் இறையாண்மையை பேணிப் பாதுகாக்கும் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். இந்த விடுதலைப் போராட்டம் அகிம்சை வழிப் போராட்டம், அரசியல் வழிப் போராட்டம், ஆயுத வழிப் போராட்டம் மற்றும் தமிழ் இனவழிப்பிற்கு எதிரான போராட்டம் என்று பல கட்டப் போராட்டங்களாக இன்று வரைத் தொடர்கின்றது. ஒவ்வொரு கட்டப் போராட்டத்திலும், தமிழீழத்தை இலக்காகக் கொண்ட வெவ்வேறு அரசியல் அமைப்புகளும் விடுதலை அமைப்புகளும் போராடி வந்துள்ளனர். இருப்பினும், “ஈழத் தமிழ் தேசியத்தை மையப்படுத்திய கடந்த நூற்றாண்டின் இரண்டு முக்கிய அமைப்புகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி (Federal Party) மற்றும் அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) ஆகிய இரண்டு அமைப்புகளும் தமது செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகளில் தமிழ் பேசும் பிராந்தியங்களின் பொருளாதார மற்றும் வளங்களின் வளர்ச்சியை முக்கிய கூறுகளாக இணைத்தது குறிப்பிடத்தக்கது.” (Tamil Guardian, 2012. தமிழாக்கம்). இதனால் «தமிழீழ விடுதலைப் போராட்டம்» என்ற பதத்தை அறிந்தோ அறியாமலோ இந்த இரண்டு அமைப்புகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு ஒரு பரந்த அளவைக் கொண்டது. அது ஈழம், புலம்பெயர் தமிழர் மற்றும் தமிழ்நாடு ஆகியத் தளங்களைக் கொண்ட ஓர் வரலாறு ஆகும். அது பல அரசியல் மற்றும் விடுதலை அமைப்புகளைக் கொண்ட அகிம்சை, அரசியல், ஆயுத வழி மற்றும் இனவழிப்பு என்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பகுதி 2: நோர்வேயிலிருந்து வெளியான இரண்டு தமிழ் சஞ்சிகைகள் (21.11.2020)

வரலாற்றின் அடிப்படையில், கடந்த நூற்றாண்டின் ஈழத் தமிழ் தேசியத்தை மையப்படுத்திய இரண்டு முக்கிய அமைப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒன்றாகும். அவர்கள் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசையை முன்னகர்த்திக் கோரினார்கள். அவ்வாறே தமிழர்கள் அவர்களை தங்களது ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டனர். இதன்மூலம் தமிழர்களின் வரலாறு இந்த போராளிகளின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளது. போராளிகளின் வரலாறு தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ளது. இருப்பினும், இந்த விடுதலை அமைப்புக் குறித்து சர்வதேச அளவில் வெவ்வேறு கண்ணோட்டங்கள் உள்ளன. அந்த முன்னோக்கு தமிழர்களின் முன்னோக்குக்கு முரணாக உள்ளதை தமிழர்களால் உணரப்படுகின்றது. ஒவ்வொரு முன்னோக்குகளும் வெவ்வொறு மதிப்புகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையிலிருந்து பிறப்பெடுக்கிறன. சர்வதேச மதிப்புகளின் காரணமாக இந்த போராட்ட வரலாற்றில் எஞ்சி இருக்கும் வரலாற்று ஆவணங்கள் அச்சுறுத்தப்பட்டு அழிவுக்கு உட்படுத்தப்படுகின்றது. அவ்வாறான கணிப்புகளின் காரணமாக ஈழத்தில் உள்ள ஏனைய அமைப்புகளை விட இந்த விடுதலை அமைப்பின் வரலாறும் போராளிகளின் வரலாறும் அச்சுறுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றது. அதனால், இந்த போராட்டத்தின் வரலாற்றை அழிப்பது தமிழ் வரலாற்றை அழிப்பதாகும். இது தமிழ் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியை அழிப்பது ஆகும்.

தொழில்நுட்ப அழிவு

மறுபுறம், போதிய அளவு புரிதலின்மை காரணமாக இந்த ஆவணங்கள் தொழில்நுட்ப அழிவிற்கு உள்ளாகின்றன. அதைத் தடுக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது. ஒளி மற்றும் ஒலி கோப்புகளை எண்ணிம முறையில் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்வதன் மூலம் ஒரு ஆவணத்தின் தரத்தை இழக்க நேரிடும். ஒவ்வொரு முறையும் ஒரு ஒளி அல்லது ஒலிப் பதிவு பதிவேற்றப்பட்டு பதிவிறக்கம் செய்யப்படும் போது “compression” காரணமாக ஒளி/ ஒலியின் தரம் இழப்படுகின்றது. காட்சி மற்றும் ஒலியின் தரம் இழக்கும் போது உள்ளடக்கத்தைக் கேட்பது, படிப்பது, பார்ப்பதில் சிரமம் உண்டாகும். காலப்போக்கில், உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வது இயலாது போகும். அதனால் ஒரு வரலாற்று ஆவணம் இழக்கப்படும். தமிழர்களின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் மீதமுள்ள ஆவணங்களை இந்த தொழில்நுட்ப அழிவிலிருந்து பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒரு மாவீரனின் கடிதம்
முகநூல் இடுகையின் படம் (22.11.2020).
“மக்கள் முன்னணி பின்லாந்து இளைஞர்அணி” இன் முகநூல் இடுகை (22.11.2020).

மேலே உள்ள முகநூல் இடுகையில் ஒரு போராளி ஒரு கடிதத்தைப் படிக்கும் காணொளிப் பகுதி உள்ளது. இந்த கடிதத்தை அன்புமணி என்ற இன்னும் ஒரு போராளி எழுதியுள்ளார். அவர் ஒரு போர்க்களத்திற்கு செல்வதற்கு முன்பு தேசியத் தலைவருக்கு இந்த கடிதத்தை எழுதியதாக இந்தக் காணொளியில் கூறப்படுகின்றது. இந்தக் கடிதம் மே 2009 இல் ஈழத்தில் நிகழ்ந்த தமிழ் இனவழிப்பிலிருந்து தப்பியிருக்குமா என்பது சந்தேகமானதே. இன்று இந்தக் காணொளி மட்டும்தான் எஞ்சியுள்ளது. இதுவே அன்று தேசியத் தலைவருக்கு எழுதிய கடிதத்திற்கான ஒரே ஒரு சான்றாக உள்ளது. கீழே அந்த கடிதம் எழுத்துருவாக:

«…தமிழீழம் பற்றிய தனது கனவை எம் தலைவர் அவர்களுக்கு பகிர்ந்து கொள்கின்றான்.

அன்பின் அண்ணா,
எங்கள் உயிர்மீது வெடிகுண்டு ஏந்தி வெடிக்கும் போது, நாங்கள் உங்களை நம்பியே வெடிக்கிறோம். நீங்கள் தமிழீழ தேசம் ஒன்றைக் கட்டியெழுப்பி அதில் எங்கள் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வார்கள் என்று நம்பியே வெடிக்கின்றோம்.

அன்பின் அண்ணா, எங்கள் மக்கள் மிகவும் பாவப்பட்டவர்கள். அவர்கள் துண்பங்களை சுமந்து களைத்துப் போனவர்கள். அவர்களுக்கான சுதந்திரம் என்ன விலை கொடுத்தேனும் பெறப்பட வேண்டும். அதை நீங்கள் பெற்றுக் கொடுப்பீர்கள் என்று முற்றும்முழுதான நம்பிக்கையுடன் வெடிக்கிறேன். அமையப் போகும் தமிழீழம் முற்றும்முழுதாக தன்னிறைவான பொருளாதாரத்தைக் கொண்டதாக இருக்க வேண்டுமெனில் அதற்குரிய அடிக்கற்கள் இப்போதே நாட்டப்பட வேண்டும்

மேலும் அவன் சொல்கிறான்.

…எமது நாட்டில் ஒரு பிச்சைக்காரரும் இருக்கக்கூடாது. அது வயது வந்தவர்களானாலும் சரி, சிறுவர்களானாலும் சரி. அப்படியானவர்களை எமது அரசாங்கம் தனது பொறுப்பில் எடுத்து வளர்க்க வேண்டும். அதேபோல் தமிழீழத்தில் அனைத்துப் பிரஜைகளும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். அதையும் எமது அரசே கவனம் எடுக்க வேண்டும். அதேபோல் உலகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுக்களும் எம் தேசத்தில் பயிற்றப்பட்டு, அனைத்து விளையாட்டுக்களிலும் எமது வீரர்கள் முன்னிலையானவர்களாக இருக்க வேண்டும்.
ஏழைப் பணக்காரர்கள் என்ற வேறுபாடு, சாதி சமய ஏற்றத் தாழ்வுகள் அற்ற ஒரு சமூகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான சீதனக் கொடுமைகள் முற்றும்முழுதாக இல்லாது ஒழிக்க வேண்டும். அதில் எமது அரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

என அவனது கடிதம் தொடர்ந்து செல்கிறது. இது அன்புமணி என்ற ஒரு மாவீரனின் கடிதம்தான்.»

தொலைநோக்கு

இனவழிப்பு என்பது மனித உயிர்களை பெருமளவில் கொல்வது மட்டுமல்ல, அது ஒரு இனத்தின் தடங்களையும் அழிப்பது ஆகும்.

சமூக ஊடகங்களில் பதியப்படும் இவ்வாறான செயல்பாடுகள் தமிழரின் வரலாற்றை உலகுக்குச் சொல்லும் தொடர்ச்சியான போராட்டம், எழுச்சி, நினைவுகூறல் மற்றும் கடத்தல் போன்றவற்றின் வெளிப்பாடாகும்.
ஆனால் இந்த வகையான செயல்களை நீண்ட கால நோக்குக் கொண்ட செயல்களாக திசை திருப்ப வேண்டிய அவசியம் உள்ளது. நாளைய தினமுக்கான்றி சொல்லும் ஒரு கதையை எத்தனை முறை தமிழ் சமூகம் பதிவேற்றி மற்றும் பதிவிறக்க முடியும்? தமிழ் சமூகம் இந்த கதைகளை 100 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சொல்வதற்கான ஒருப் பொறிமுறையைக் கண்டறிய வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட பதிப்புகள் (secured version) பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். அதாவது பரவலாக்கத்திற்கான பதிப்புகள் (dissemination version) தனது தரத்தை இழக்கும்போது, இன்னும் ஒரு பரவலாக்கப் பதிப்பை உருவாக்க தமிழ் சமூகத்திடம் பாதுகாக்கப்பட்ட பதிப்புகள் இருக்க வேண்டும். இந்த பாதுகாக்கப்பட்ட பதிப்பு அதன் தோற்றம், நோக்கம் மற்றும் சூழல் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொண்டு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த பாதுகாக்கப்பட்ட பதிப்புகள் 100 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு அணுகக்கூடியவாறு இருக்க வேண்டும். ஒரு நீண்டகால தொலைநோக்குப் பார்வை இன்று கிடைக்கக்கூடிய அனைத்து வகையான ஆவணங்களையும் நீண்ட காலப் பாதுகாப்பிற்காகப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் இன்று எம்முடன் வாழ்பவர்களின் நினைவுகளையும் அனுபவங்களையும் வாய்மொழி வரலாற்று ஆவணங்களாக ஆவணப்படுத்த வேண்டும். பொருத்தமான உலகத் தமிழ் அமைப்புகளும் தனிநபர்களும் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த இன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தொலைநோக்குப் பார்வை மூலப் பதிப்புகளை நீண்டகாலம் பேணிப் பாதுகாக்க வேண்டும். ஏனைய தமிழ் அமைப்புகளும் தனிநபர்களும் ஏற்கனவே ஆவணப்படுத்தல், பேணிப் பாதுகாத்தல் மற்றும் பொது அணுக்கப் பணிகளைச் செய்கின்றவர்களுக்கு ஆதரவளித்து ஊக்குவிக்க வேண்டும். அனைத்து வகையான எழுத்துரு, ஒளி மற்றும் ஒலி வடிவங்கள் மற்றும் அனலாக் (analouge) மற்றும் எண்ணிம வடிவங்களிலான ஆவணங்களை நீண்ட காலம் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதனூடாக தமிழரின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியம் பேணிப் பாதுகாக்கப்படும்.


மேலதிகம்:
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள்: பகுதி 1
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பகுதி 2: நோர்வேயிலிருந்து வெளியான இரண்டு தமிழ் சஞ்சிகைகள்


பின்குறிப்பு

1 https://www.britishlegion.org.uk/get-involved/remembrance/about-remembrance/the-poppy

மேற்கோள்கள்

Tamil Guardian. (2012). Stamp of defiance and aspiration. Retrieved from https://www.tamilguardian.com/content/stamp-defiance-and-aspiration


Reproduction of this article is allowed when used without any alterations to the contents and the source, DsporA Tamil Archive, is mentioned.

புதுப்பிக்கப்பட்டது: 28.11.2020

One thought on “தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பாகம் 3: தொழில்நுட்ப அழிவிலிருந்து பேணிப் பாதுகாத்தல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s