ஏப்ரல் 2020
“நோர்வேக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களால் எவ்வாறு நோர்வேயில் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சி அடைந்தது” என்ற கருப்பொருளில் ஓர் நூல் திட்டத்தை பகீரதி குமரேந்திரன் 2017ம் ஆண்டு முதல் முன்னெடுத்து வந்தார். இது நோர்வேயில் உள்ள தமிழர்களின் உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்த அவரால் சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஆகும். இது DsporA Tamil Archive இன் திட்டமாக ஆரம்பிக்கப்படவில்லை.
இத்திட்டம் தொடர்பாக நோர்வேயிய தேசிய நூலகத்தின் நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனத்துடன் (The Norwegian Institute of Local history / Norsk lokalhistorisk institutt – NLI) 2018ம் ஆண்டு முதல் தொடர்பில் இருந்து வந்தார். அந்த அடிப்படையில் 22. ஏப்ரல் 2020 அன்று lokalhistoriewiki.no இல் உள்ள நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டத்தை மீள் செயல்படுத்த NLI அவரைத் தொடர்பு கொண்டது.
அதே 22. ஏப்ரல் 2020 அன்று இவர் முன்னெடுத்த நூல் திட்டத்திற்கு தரவுகள் சேகரிக்கும் முகமாக “நோர்வேயில் தமிழ்க் கல்வி – இரண்டு கேள்விகள் கொண்ட தரவுத் திரட்டு” என்ற ஓர் முகநூல் இடுகையை பதிவு செய்தார். பின்னர் 23. ஏப்ரல் 2020 அன்று ஆரம்பிக்கப்பட்ட “நோர்வே வாழ் தமிழர் ஆவணம் – Archive of Tamils in Norway” என்ற முகநூல் பக்கம் மூலமாக தரவுகளை தொடர்ந்து சேகரிக்க முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முகநூல் பக்கமே காலப் போக்கில் dspora.no எனும் இணையத்தளமாக 22. யூலை 2020 அன்று பரிணமித்தது. அதோடு நூல் திட்டமும் இணையவழிக் கட்டுரைகளாகப் பரிணமித்தன.
NLI இன் வேலைத்திட்டத்திற்கான கடிதம் நோர்வே வாழ் மக்களுக்கு 08. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் அறியப்படுத்தப்பட்டது. இது “நோர்வே வாழ் தமிழர் ஆவணம் – Archive of Tamils in Norway” என்ற முகநூல் வாயிலாக அறியப்படுத்தப்பட்டது. இது நோர்வே உள்ளூர் தமிழ் வரலாற்றை உருவாக்குவதற்காக அனைத்துத் தமிழர்ளையும் பங்களிப்பாளர்களாக வருமாறு அழைக்கும் NLI இன் அழைப்புக் கடிதம்.
10. மே 2020
“ஆனால் ஆவணம் என்றால் என்ன?” என்று வளர்மதி இராசசிங்கம் கேட்டார். அவர் “நோர்வே வாழ் தமிழர் ஆவணம் Archive of Tamils in Norway” என்ற முகநூல் பக்கத்தில் பதிவு செய்த இடுகைகளைப் பார்த்து “ஆவணம்” என்ற சொல் கூட பலருக்கு தெரியாத ஒரு சொல்லாக இருக்கும் என்று சுட்டிக் காட்டினார். அதன் அடிப்படையில், “ஆவணம்” என்றால் என்ன என்ற ஒரு தொடர் கட்டுரை 13. யூன் 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
தொடர் கட்டுரை: ஆவணம் என்றால் என்ன?
08. யூலை 2020
சஞ்சயன் செல்வமாணிக்கம் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களை மேற்கொள்வதற்கான நேர்காணல் வழிகாட்டி ஒன்றை உருவாக்குவதற்கான உதவியை DsporA Tamil Archiveவிடம் 08. யூலை 2020 கோரினார். அவர் நோர்வே நாட்டில் நூலக நிறுவனத்திற்காக செயற்படும் ஒரு தன்னார்வலர். அவர் “நோர்வேயில் குடியேறிய தமிழர்களின் வாழ்க்கை” எனும் கருப்பொருளில் நோர்வே-தமிழர்களின் வாய்மொழி வரலாற்றை ஒலி/ ஒளி வடிவில் பதிவு செய்ய விரும்புகின்றான். அப்பதிவுகளை aavanaham.org இல் பேணிப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டார்.
உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாக DsporA Tamil Archive இன் ஆரம்பகர்த்தா நோர்வேயில் தமிழ் கல்வியின் வளர்ச்சி தொடர்பாக வாய்மொழி வரலாற்று நேர்காணல் பதிவுகள் செய்து வருகின்றார். இத்திட்டம் DsporA Tamil Archive இன் திட்டமாக ஆரம்பிக்கப்படவில்லை. எனினும் DsporA Tamil Archive பெற்றுக்கொண்ட கோரிக்கையின் கருப்பொருளான, “நோர்வே வாழ் தமிழர்களின் புலப்பெயர் வாழ்க்கை”, அடிப்படையில் அந்த உள்ளூர் வரலாற்று நூல் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட நேர்காணல் வழிகாட்டி மாற்றியமைக்கப்பட்டு இங்கு வழங்கப்படுகின்றது. இந்த வழிகாட்டி நோர்வே-தமிழரின் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. இருப்பினும், இந்த வழிகாட்டியில் உள்ள கேள்விகள் பிற புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அந்தந்தப் புலம்பெயர் நாடுகளின் சூழலுக்கு ஏற்றவாறு கேள்விகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்கும்.
PDF │ Word
வாய்மொழி வரலாறு மற்றும் அதன் செயல்முறை பற்றிய மேலதிக தகவல்.
19. யூலை 2020
வசீகரன் சிவலிங்கம் DsporA Tamil Archiveயைத் தொடர்பு கொண்டு சமூகத்தில் நிலவும் ஒரு பொதுவான தேவையை பகிர்ந்து கொண்டார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழர் ஆகிய இவர் ஒரு கவிஞர் மற்றும் Vaseeharan Creations Sivalingam மற்றும் நோர்வே தமிழ் திரைப்பட விழா (Norway Tamil Film Festival) ஆகிய அமைப்புகளின் நிறுவுனர் ஆவார்.
நோர்வே வாழ் தமிழர்கள், உலகத் தமிழர்கள் போலவே, பல நூல்களையும் பிற எழுத்து வடிவிலான வெளியீடுகளையும் தமிழிலும், பிற மொழிகளிலும் தமிழ் மற்றும் தமிழர்களைப் பற்றி வெளியிட்டு வருகின்றனர். ஆனால் நோர்வேயிய நூலகங்களில் தமிழ் நூல்களின் பாரிய பற்றாக்குறை உள்ளது. நாம் நோர்வே-தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை மட்டும் சேகரித்து வழங்கினாலேயே, நோர்வேயியப் பொது நூலகங்களில் உள்ள தமிழ் பிரிவு நிரப்பப்பட்டுவிடும்.
நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering) மற்றும் அதன் செயல்முறை பற்றி மேலதிக தகவல்.
27. ஓகஸ்ட் 2020
கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பான «Tamils in Canada» DsporA Tamil Archive வைத் தொடர்பு கொண்டது. கனடாவில் உள்ள ஆவணகத்தில் தங்கள் அமைப்பின் உள்ளக ஆவணகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகளைக் கண்டறிய அவர்கள் தமது முதல் முயற்சியை எடுத்துள்ளனர்.
கட்டுரை: கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்
22. செப்டம்பர் 2020
ஈழத்தில் வசிக்கும் “நிலவன்” (புனைபெயர்) DsporA Tamil Archive ஐ தொடர்பு கொண்டு ஒரு கோரிக்கையை முன் வைத்தார். ஒரு எண்ணிமப் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பி, இந்த ஆவணத்தை எவ்வாறு படித்து அறிந்து கொள்ள முடியும் என்று கேட்டுக் கொண்டார்.
கட்டுரை: பேணிப் பாதுகாத்தல்: எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும்
05. யனவரி 2021
காப்பகப்படுத்தலை எங்கு மற்றும் எவ்வாறு ஆரம்பிப்பது? என்று நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்நாள் செயல்பாட்டாளர் ஒருவர் கேட்டார்.
புதுப்பிக்கப்பட்டது: 01.03.2021
One thought on “அன்புள்ள டிஸ்போரா”