எம்மைப் பற்றி

Bogstad பண்ணை, ஒசுலோ (யூலை, 2019)
எமது வரலாறு

எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. அதுவே எதிர்காலத்தில் எமது வரலாறாகின்றது. இந்த வலைத்தளத்தின் கதை 23. ஏப்ரல் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” என்ற முகநூல் பக்கமாக ஆரம்பித்தது. நோர்வே வாழ் தமிழர்களின் செயற்பாட்டில் உருவான வெளியீடுகளை அறிந்து கொள்ளவும் சேகரிக்கவும் ஒரு தளமாக இது உருவாக்கப்பட்டது. அத்துடன் நோர்வே நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் தமிழ்க் கல்வி சேவைகள் குறித்த வரலாற்றுத் தகவல்களை சேகரிக்கவும் உருவாக்கப்பட்டது. ஆனால் விரைவில் ஆவணக்காப்பு விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய முதன்மை தேவையைக் கண்டறியப்பட்டது. அதன் விளைவாக “‘ஆவணம்’ என்றால் என்ன?” என்ற முகநூல் இடுகைத் தொடர் 13. யூன் 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

நோர்வே வாழ் தமிழ் ஆர்வலர் ஒருவரின் ஆலோசனையின் அடிப்படையில், “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” என்ற முகநூல் பக்கம் ஒரு வலைத்தளமாக பரிணமிக்க ஆரம்பித்தது. முதல் கட்டமாக, முகநூல் பக்கம் 07. யூலை 2020 அன்று “DsporA Tamil Archive” என்ற பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் 22. யூலை 2020 அன்று இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த பெயர் மாற்றம் நோர்வேக்கு குடியேறிய அனைத்து சமூகங்களையும் மற்றும் பிஜி தீவுகள் முதல் கனடா வரை, நோர்வே முதல் தென் ஆபிரிக்கா வரை வாழ் உலகத் தமிழர்களையும் உள்ளடக்கவே செய்யப்பட்டது.


செயல்நோக்கு:
ஆவணக்காப்பு விழிப்புணர்வு
ஆவணப் பரப்புதல்


இங்கு பதியப்படும் ஆவண விழிப்புணர்வு பதிவுகள் நோர்வே ஆவணச் சட்டத்தையும் மற்றும் நோர்வே தமிழர்களின் ஆவணங்களையும் அடிப்படையாக் கொண்டு இருந்தாலும், அனைத்து புலம்பெயர் சமூகத்தினருக்கும் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இந்த உள்ளடக்கம் பயனுள்ளதாக அமையலாம்.

நோர்வே ஆவணக்காப்புச் சட்டத்தின்படி, ஆவணங்களை உருவாக்க அல்லது பாதுகாக்க தனியார் நிறுவனங்களுக்கு கட்டாயக் கடமை இல்லை. எனவே ஆவணக்காப்புக் கடமை என்பது தனியார் அமைப்புகளின் தனிப்பட்டப் பொறுப்பாக உள்ளது. அதனால் தனியார் அமைப்புகளைச் சுற்றியுள்ள சமூகத்தின் வரலாறு, குறிப்பாக புலம்பெயர் சமூகங்களின் வரலாறு, விடுபட்டுப் போகும் அபாயம் உள்ளது. மொழி, பண்பாடு, வரலாறு, புலம்பெயர்வு, சமூக கட்டமைப்புகள், வாழ்வியல், தாயக வாழ்க்கை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை என்று பலதரப்பட்ட விடயங்களை ஆவணப்படுத்தும் தேவை உள்ளது. இருப்பினும், நோர்வேயில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள தனியார் தமிழ் நபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளால் சிறிதளவில் ஆவண சேகரிப்பு நடைபெறுகின்றன. இன்நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கவை. இவை சமகால மற்றும் எதிர்கால தலைமுறையின் சமூக வளர்ச்சியில் பாரிய பங்கைக் கொண்டுள்ளன. ஆனால் பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் பற்றிய போதிய புரிதல் பற்றாக்குறையாக உள்ளது.

பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தலின் நோக்கமானது அவற்றை பொது அணுகலுக்குக் கிடைக்கச் செய்வதாகும். ஆவணப் பொருட்கள் அணுகக்கூடியதாகவும், பொதுப் பயன்பாட்டிற்குக் கிடைக்கும்போதுதான், வரலாறு நினைவு கூறப்பட்டு தொடர்ந்து வாழும். இல்லையெனில் ஆவணங்கள் அறியப்படாமல் போய்விடும். அவை தனியார் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டு, என்றென்றும் இழக்கப்பட்டுவிடும். பின்னர் வரலாறு மறக்கப்பட்டுவிடும்.

பகீரதி குமரேந்திரன்


“ஆவணம் எதிர்காலத்திற்கான அன்புக் குறிப்பு”

ஆவண ஆர்வலர் ஜேசன் ஸ்காட் எழுதிய “மெட்டாடேட்டா எதிர்காலத்திற்கான அன்புக் குறிப்பு” என்ற மேற்கோளின் தழுவல்

உருவாக்கம்│creation: 27.07.2020
புதுப்பிப்பு│update: 16.01.2021