தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பகுதி 2: நோர்வேயிலிருந்து வெளியான இரண்டு தமிழ் சஞ்சிகைகள்

சுதந்திரதாகம் (1989)
சுவடுகள் (1988)

English

«ஈழத் தமிழர்களுக்கு கார்த்திகை மாதம் ஒரு முக்கியமான மற்றும் பகுத்தறியும் சிந்தனைக்கான (refelction) நேரம் ஆகும். நாங்கள் நவம்பர் பிற்பகுதியில் மாவீரர் நாளை நினைவுகூறுகின்றோம். இது அடக்குமுறையாளர்களிடமிருந்து சுதந்திரத்தையும் மரியாதையையும் நிலைநாட்ட தியாகங்கள் செய்தவர்களை நினைவு கூறம் ஒரு தினம் ஆகும். அவர்கள் இல்லாதபோது நாம் உணரும் அளப்பெரிய சோகத்தையும் இழப்பையும் நினைவில் கொள்வதற்கான ஒரு நேரம் ஆகும். இது சமூகம் தனது ஆழ்ந்த கவலையையும் பகுத்தறிந்த சிந்னைகளையும் பிரதிபலிப்பதற்கான (reflective time) நேரம் ஆகும். மாவீரர் நாள் என்பது இனப்படுகொலையை நினைவுகூறுவதற்கும், நாம் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து இரங்கல் தெரிவிக்கவும், பகுத்தறிந்து சிந்திக்கவும், நினைவுகூறவும் முன்னெடுக்கும் ஒரு தினம் ஆகும்.» (03.11.2020 அன்று pearlaction.org எனும் அமைப்பு வெளியிட்ட மின் அஞ்சல் செய்திமடலில் வெளியான ஆங்கில எழுத்துருவின் தமிழாக்கம்).

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்1 உயிர் நீத்த அனைத்து தியாக தீபங்கள் மற்றும் அப்பாவி உயிர்களின் நினைவாக, DsporA Tamil Archive இந்த 2020ம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் ஈழத் தமிழரின் நவீன வரலாற்றைப் பகுத்தாய்வதற்காக (refelction) இரண்டு சஞ்சிகைகளை வழங்க முன்வருகின்றது. இவை 1980களில் நோர்வேயில் உருவான இரண்டு மாறுபட்ட அமைப்புகளால் வெளியிடப்பட்டவை. இவை அக்கால ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் சமூக விவகாரங்களை பேசும் சஞ்சிகைகளாக அமைந்திருந்தன. இந்த சஞ்சிகைகள் கடந்த காலத்தில் உருவான சமூக கட்டமைப்பைப் புரிந்துகொள்வதற்கான வரலாற்று மூலங்கள் ஆகும். இந்த வரலாற்று மூலங்கள் அக்காலச் சூழலின் விளைவா இன்று இருக்கும் சமூக கட்டமைப்பை உற்று நோக்கி, புரிந்துகொள்ள உதவும். ஒரு உற்று நோக்குதலின் விளைவாக பெறும் புரிதல், இந்த சமூகம் எதிர்காலத்தில் நகர்ந்து செல்லவும் உதவும்.

«கடந்த காலத்தை சரிபார்ப்பவர் (control) எதிர்காலத்தை நிர்வகிக்கின்றார். நிகழ்காலத்தை நிர்வகிப்பவர் கடந்த காலத்தை சரிபார்க்கின்றார் (control).» (ஜோர்ஜ்ஓர்வெல் (George Orwell)2 ஒரு ஆவணக் களஞ்சியக் கண்ணோட்டத்தில், ஒரு தேசியம் தனது சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் பக்கங்களையும் பிரதிபலிக்கும் ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்து அணுக்கத்திற்குக் கிடைக்கச் செய்யும் பொழுது மட்டுமே பலமடைகின்றது. ஒரு சமூகம் தனது கடந்த காலத்தை ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தைத் திட்டமிடும் நுண்ணறிவைப் பெறுகின்றது. தனது நிகழ்காலத்தை ஆராய்வதன் மூலம் கடந்த காலத்தைப் பேணிப் பாதுகாக்கும் அடிப்படையைப் பெறுகின்றது.

dspora.no, 16.11.2020

1980-1990 களில் இந்த இரண்டு சஞ்சிகைகளும் நோர்வேக்கு புலம்பெயர்ந்த தமிழரின் முதல் தலைமுறையினர் நன்கு அறிந்திருப்பார்கள். அதோடு அதனைச் சூழ்ந்திருந்த அரசியல் சூழலையும் முரண்பாடுகளையும் விமர்சனங்களையும் எதிர் கொண்டிருப்பார்கள். மறுபுறம், இரண்டாம், மூன்றாம் அல்லது எதிர்காலத் தலைமுறைத் தமிழர்களுக்கு அக்கால அரசியல் சூழலைப் புரிந்து கொள்ள சவாலாக இருக்கலாம். இருப்பினும், இந்த இரண்டு சஞ்சிகைகளும் “தமிழ் மொழி” என்ற புள்ளியில் சந்தித்தன. குறிப்பாக “தமிழ் தட்டச்சு”. வாய்மொழி வரலாற்று நேர்காணல்கள் தமிழ் இலக்கியம், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ் மொழியின் பயன்பாடு ஆகியவற்றில் ஆர்வமும் உட்சாகமும் நிறைந்ததாக அமைந்தன.
இந்த சஞ்சிகைகளிற்கான வேலைத் திட்டச் செயல்பாடுகள் தமிழ் தட்டச்சு அமைப்பைச் (typesetting) சோதிக்கவும், மேம்படுத்தவும், பயன்படுத்தவும் புலத்தில் ஒரு தளமாக அமைந்தன. இவை நோர்வே மற்றும் ஏனைய புலம்பெயர் வாழ் தமிழர் மேற்கொண்ட பிற தமிழ் வெளியீட்டுச் செயல்திட்டங்களுக்கு அடித்தளமாகவும் அமைந்தன. இப்போது இவை தமிழ் சமூக ஆவணங்களும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்களுமாக உள்ளன. ஏனெனில், அக்கால அரசியல் இக்கால வரலாறு. இந்த வரலாறு சமூகத்தின் அடையாள வளர்ச்சி, இருப்பு மற்றும் எதிர்கால அரசியலுக்கு அடிப்படையாக அமைகின்றது.

சமூகத்தில் எழும்பக்கூடிய சவால்கள், கேள்விகள், சிக்கல்களுக்கு சமகால தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது வரலாற்று ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். சமூகம் தமது வரலாற்றை அறிவுபூர்வமாக அணுக அவை வழியமைக்கும். அதோடு அவர்கள் தமது சமூகத்தில் உள்ள சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்ப்பதோடு தமது பாரம்பரிய விழுமியங்களை தர்க்க ரீதியாக வரலாற்று ஆதாரங்களுடன் பாதுகாத்து கடத்தவும் அவை அடிப்படையாக அமையும். இன்றைய புலம்பெயர் இளம் தலைமுறையினர் தங்களது தமிழ் தேசியம், தங்களது தேசிய அடையாளங்கள், பூர்வீக வரலாறு, பூர்வீக தாயகம், பூர்வீக பாரம்பரியம் ஆகியவற்றுக்கான உறைவிடங்களைத் தேடுகின்றனர். மறு புறம், 1980 களில் அந்நிய சக்திகளாலும் இரண்டகர்களாலும் தமிழீழ விடுதலை அமைப்புகளிற்குள் பின்னப்பட்ட சதி வேலைகளால்3 உருவான முரண்பாடுகளும் வேறுபாடுகளையும் சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலச் சந்ததியினர் புதிய உறவுகளையும் நல்லிணக்கங்களையும் உருவாக்க வரலாற்று ஆவணங்கள் வழியமைக்கும். அவை மீள் நிகழக்கூடிய வரலாற்றைத் தடுக்கும். வேறுபாடுகளை ஏற்றுக் கொண்ட, ஆனால் ஒரு ஒருமித்த தமிழ் தேசியத்திற்கான அடிப்படைக்கு அவை உரமாகவும் அரணாகவும் அமையும். இல்லையேயின், வாய்மொழிப் பாரம்பரியமாக பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுமாயின் வரலாறு பல கேள்விக்குள்ளாக்கப்படலாம், திரிவுபடுத்தப்படலாம், மறைக்கப்படலாம், அழிக்கப்படலாம். அதனால் வரலாறு பலத்த அபாயத்திற்கு உள்ளாக்கப்பட்டு சமூக சமநிலையைப் பேணுவதும் மேலும் சிக்கலாகும்.

«இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.»

மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன்4

இக்கட்டுரை வாய்மொழி வரலாறு5 நேர்காணல்கள், தொலைத்தொடர்புகள், தமிழ் அமைப்பின் உள்ளக ஆவணக ஆவணங்கள் மற்றும் தனிநபர் ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.


சுதந்திரதாகம் (1989)│சுவடுகள் (1988)

எண்ணிமப்படுத்தப்பட்ட சுதந்திரதாகம் (1989) சஞ்சிகையை வாசிக்க.
எண்ணிமப்படுத்தப்பட்ட சுவடுகள் (1988) சஞ்சிகையை வசிக்க.


உள்ளடக்கம்:
  • நோர்வேயில் தமிழர் புலம்பெயர்வு
  • நோர்வேயில் தமிழர் அமைப்புகள்
  • சுதந்திரதாகம்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
  • சுதந்திரதாகம்: செய்திமடல்
  • சுதந்திரதாகம்: சிறப்பு மலர்
  • சுதந்திரதாகம்: சஞ்சிகை
  • சுவடுகள்: தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடம்
  • சுவடுகள்: சஞ்சிகை
  • சமூக-அரசியல் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள்

நோர்வேயில் தமிழர் புலம்பெயர்வு

1956 ஆம் ஆண்டு நோர்வேக்கு புலம்பெயர்ந்த முதல் ஈழத் தமிழர் அன்ரெனி இராஜேந்திரம் ஆவார். அவரைத் தொடர்ந்து, 1960 களில் இருந்து ஈழத் தமிழரின் நோர்வே புலம்பெயர்வை மூன்று முக்கிய கட்டங்களாகப் பிரிக்கலாம்:
1) ஒருங்கிணைத்த தொழிற்பயிற்சி கூடிய வேலை வாய்ப்பு அடிப்படையிலான புலம்பெயர்வு
2) நாட்டுப்புற உயர்நிலைப் பள்ளிகள் (Folkehøgskole) அல்லது பல்கலைக்கழகங்களுக்கு மாணவராகப் புலம்பெயர்வு
3) ஏதிலிகளாகப் புலம்பெயர்வு

குடும்ப மீள் ஒருங்கிணைவு அடிப்படையிலான புலம்பெயர்வு மேற்குறிப்பிட்டுள்ள மூன்று கட்டங்களிலும் இணையாக நடைபெற்று வந்துள்ளது.

நோர்வேயில் தமிழர் அமைப்புகள்

1970 மற்றும் 1980 களில், தமிழ் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் ஏனைய அமைப்புகள் படிப்படியாக பேர்கன் (Bergen), ஒசுலோ (Oslo), ட்ரொண்ட்ஹெய்ம் (Trondheim), ஸ்டாவங்கர் (Stavanger) மற்றும் நோர்வேயின் பிற இடங்களில் தோன்ற ஆரம்பித்தது. ஆயினும்கூட, 1980 களில் தமிழர்கள் மீதான தொடர்ச்சியான படுகொலைகளும் பிற அரசு அடக்குமுறை, வன்முறைகளும் புலம்பெயர் தமிழர்கள் தாம் நோர்வேயில் குடியேறிய பல்வேறு நகரங்களில் அரசியல் அமைப்புகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தைப் போட வழிவகுத்தது.
மேல் குறிபிட்டுள்ள பல்வேறு வகையான அமைப்புகள் துண்டுப்பிரசுரங்கள், கையேடுகள், சுவரொட்டிகள், மலர்கள், சஞ்சிகைகள், நூல்கள், ஒலி/ ஒளி வெளியீடுகள், இணையத்தளம் என்று பல வெளியீடுகளும் தயாரிப்புகளும் தமது 40 ஆண்டுகளுக்கு மேலான நிறுவன பயணத்தில் வெளியிட்டுள்ளன.

சுதந்திரதாகம்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

சுதந்திரதாகம் எனும் வெளியீடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (Tamil Coordinating Committee (TCC))6 எனும் ஒரு அரசியல் அமைப்பால் வெளியிடப்பட்டது. இந்த அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கைக்கு ஆதரவாக செயல்படும் ஒரு சர்வதேச ஈழத் தமிழர் அரசியல் அமைப்பு ஆகும். அதாவது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை7 என்ற அரசியல் கொள்கை. இது கண்டங்களைக் கடந்து பல நாடுகளில் செயல்படுகின்றது. அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களை தமிழர் தாயகத்தின் அரசியல் விடுதலை பற்றிய ஒரு நுண்ணறிவை நோக்கி அணிதிரட்டவும், சமூக முற்போக்கான கட்டுமானப் பணிகளை தாயகத்தில் செயல்படுத்தவும், அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களை வெற்றிகரமான குடிமக்களாக வழிகாட்டவும் இந்த அமைப்பு தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது (tccnorway.no). 1983ம் ஆண்டு ஆரம்பித்து பல கட்ட பரிணாம வளர்ச்சிகளைக் கடந்து இன்றுவரை TCC நோர்வே அதன் செயல்பாடுகளை பல்வேறு களஅளவில் தொடர்கின்றது. அதில் அரசியல், கல்வி, கலை, விளையாட்டு மற்றும் நோர்வே வாழ் தமிழ்ச் சமூகம் மற்றும் தாயக வாழ் தமிழ்ச் சமூகத்தின் சமூக வளர்ச்சி ஆகியவை உள்ளடங்கும்.

சுதந்திர தாகம்: செய்திமடல்

1980 களின் இறுதிப் பகுதி தொடக்கம் 1990 கள் வரை, ஒசுலோவில் இருந்த தமிழர் நாலன்புரி மன்றம், பேர்கனில் இருந்த உதயம் மற்றும் பிற்காலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகள் “சுதந்திர தாகம்” என்ற பெயரில் செய்திமடல்களை அவ்வப்போது வெளியிட்டன. சுதந்திரதாகம் சஞ்சிகைக்கு மாறாக, இது நகல் பிரதிகளை தொகுத்து விநியோகித்த ஒரு செய்தி மடல் ஆகும். இந்த தமிழ் செய்திமடல்கள் தாயக வாழ் தமிழர்கள் குறித்து வெளியான செய்தித்தாள் கட்டுரைகளை தொடுத்து வழங்கியது. இந்த அமைப்பின் செயற்பாட்டாளர்கள் செய்தித்தாள் கட்டுரைகளை மற்றும் ஏனைய கையெழுத்துத் தகவல்களை வெட்டி A4 பக்கங்களில் ஒட்டினர். பின்னர் அதனை நகல் எடுத்துத் தொகுத்து விநியோகித்தனர்.

Tamil Coordinating Committee. (1989?). சுதந்திர தாகம். Oslo: Tamil Coordinating Committee
சுதந்திரதாகம்: சிறப்பு மலர்

“சுதந்திர தாகம்” என்ற பெயரில் சிறப்பு மலர் வடிவில் தமிழர் நலன்புரி மன்றம் எனும் அமைப்பு ஒசுலோவில் வெளியிட்டுள்ளது. அந்த A5 அளவில் வெளியான“சுதந்திர தாகம்  சிறப்பு மலர்” (06.08.1988), கையெழுத்து ஆக்கங்களை நகல் எடுத்து “saddle stitch binding with staples” என்ற முறையில் தொகுத்து வெளியிடப்பட்டது. இதில் தட்டச்சுப்பொறியால் (typewriter) உருவாக்கப்பட்ட ஆக்கம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த ஆக்கம் தமிழ்நாடு அல்லது ஈழத்திலிருந்து பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த சிறப்பு மலர் தமிழீழ விடுதலை எழுச்சியை உருவாக்க ஒருங்கிணைக்கப்பட்ட மேடை நிகழ்வை ஒட்டி வெளியிடப்பட்டது. இதுவே நோர்வேயில் ஒருங்கிணைக்கப்பட்ட முதலாவது “சுதந்திர தாகம்” மேடை நிகழ்வு என்று அறியப்படுகின்றது.

Tamilar Nalanpuri Mantram. (1988). சுதந்திர தாகம். Oslo: Tamilar Nalanpuri Mantram
சுதந்திரதாகம்: சஞ்சிகை

“சுதந்திர தாகம்” எனும் பெயரில் வெளியான முதல் சஞ்சிகை (05.08.1989) தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (Tamil Coordinating Committee, TCC) எனும் அமைப்பால் ஒசுலோவில் வெளியிடப்பட்டது. இது தமிழ்நாட்டில் தமிழ் தட்டச்சு செய்யப்பட்டு நோர்வேயில் அச்சிடப்பட்டு வெளியானது. இது “saddle stitch binding with staples” என்ற முறையில் தொகுக்கப்பட்டது.
TCC யின் இரண்டாவது “சுதந்திர தாகம்” சஞ்சிகை (07.04.1990) 1990ம் ஆண்டு பேர்கனில் வெளியிடப்பட்டது. இச்சஞ்சிகை நோர்வேயில் ஒரு மேகிண்டோஷ் (Macintosh) கணினியில் தமிழ் தட்டச்சு செய்யப்பட்டு, இங்கு அச்சிடப்பட்டு வெளியானது.
“சுதந்திர தாகம்” சஞ்சிகை வருடாந்தம் ஒருங்கிணைக்கப்பட்ட “சுதந்திர தாகம்” மேடை நிகழ்வையொட்டி வெளியானது. 1989ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இன்நிகழ்வு தமிழர் ஒருங்குணைப்புக் குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இன்நிகழ்வு ஒவ்வொரு ஓகஸ்ட் மாதம் ஒஸ்லோவிலும் ஏப்ரல் மாதம் பேர்கனிலும் நடாத்தப்பட்டது. இந்த சஞ்சிகை 1990 கள் வரை வெளியிடப்பட்டதாக அறியப்படுகின்றது.

சுதந்திரதாகம் சஞ்சிகையானது சுதந்திரதாகம் செய்திமடல் மற்றும் சிறப்பிதழ் போலவே தமிழீழ விடுதலைப் புலிகளிள் அரசியல் நடவடிக்கைகளையும் தமிழீழத் தேசிய அடையாளம் மற்றும் சிந்தனைகளையும், களப் போராட்ட நிலவரங்களையும் மக்களுக்கு கொண்டு சென்ற ஓர் சஞ்சிகை ஆகும்.
இந்த சஞ்சிகைகள் மற்றும் செய்திமடல்கள் நோர்வே மற்றும் ஏனைய நாடுகளுக்கு சந்தா அடிப்படையிலும் இலவசமாகவும் அனுப்பப்பட்டன.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் வெளியிடப்பட்ட வேறு இரண்டு சஞ்சிகைகளில் சில பதிப்புகள் நோர்வே தேசிய நூலகத்தில் முன்னரேப் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு சஞ்சிகைகளும் நோர்வேயிய மொழியில் வெளியானவை.

சுவடுகள்: தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடம்

1986ம் ஆண்டு நோர்வேக்கு புலம்பெயர்ந்து வரத் தொடங்கிய தமிழ் அகதிகளில் சிலர் மீண்டும் ஈழத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மற்றவர்கள் புகலிட அனுமதிப் பத்திரம் (visa) நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருந்தனர். 1987ம் ஆண்டு, இத்தகைய சூழ்நிலையில் இருந்த சில அகதிகள் ஒசுலோவில் உள்ள தொய்யன் தேவாலயத்தில் (Bymisjonssenteret i Tøyenkirken) தேவாலயத் தஞ்சம் கோரினர். விரைவில், தொய்யன் தேவாலயம் பல தமிழ் அகதிகளுக்கான சந்திப்பு மையமானது. அங்கு ஒன்றிணைந்த தமிழர்கள் 1987ம் ஆண்டு தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடம் (Tamil- Norwegian Association)8 எனும் அமைப்பை உருவாக்கினர். புகலிட அனுமதிப் பத்திரம் (visa) நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்படும் அபாயத்தில் வாழ்ந்த பிற தமிழ் அகதிகளுக்கு ஆதரவளிப்பதை இந்த அமைப்பு நோக்காக் கொண்டிருந்தது. இது அக்காலகட்டத்தில் பல தமிழர்களுக்கான சமூக சந்திப்புத் தளமாகவும் இருந்தது. இது ஒசுலோவில் தமிழர்களுக்கான தமிழ் கல்வி, கலை மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் வசதி செய்து கொடுத்தது. இந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் தகவல்களின் அடிப்படியில், தமிழ் அகதிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் மற்றும் புகலிட பத்திரச் சிக்கல்கள் ஓரளவு தீர்க்கப்பட்ட நிலையில், தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடத்தை அணுகிய தமிழர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடம் ஒரு சில அங்கத்தவர்களுடன், தற்போதும் பதியப்பட்ட ஒரு அமைப்பாகவே இருந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லக்க்கூடிய செயற்பாடுகள் எதுவும் இப்போது இல்லை என்று அறியப்படுகின்றது.

சுவடுகள்: சஞ்சிகை

“சுவடுகள்” எனும் சஞ்சிகை தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடம்  எனும் அமைப்பால் புரட்டாதி மாதம் (ஆங்கில மாதம் செப்டம்பர்) 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1990 களில் தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடத்திற்கு கீழ் “நோர்வே தமிழ்க் கலாசார மையம்” ஒர் சுயாதீன அங்கமாக உதயமானது. அது அக்காலத்தில் சுவடுகள் சஞ்சிகையை வெளியிட்டது. பின்னர் அந்த அங்கத்திற்கு கீழ் “சுவடுகள் பதிப்பகம்” ஆரம்பிக்கப்பட்டது.  1990 களின் பிற்படுதியில் சுவடுகள் சஞ்சிகை சுவடுகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஆரம்பத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்ட வரையறுக்கப்பட்ட நோக்கம், குறிக்கோள், பொறுப்புப் பகிர்வு என்று ஆரம்பித்து இயங்கவில்லை. தேவையின் அடிப்படியில் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அதனால் அமைப்புகளின் ஆரம்ப கால நிர்வாகக் கட்டமைப்பை துல்லியமாக வரையறுப்பது ஒரு சவாலான விடயம் ஆகும். இந்த அமைப்பிற்கான ஒரு யாப்பு எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது அணுகக்திற்கு கிடைக்கப் பெறவில்லை.

தமிழ் மாதாந்த சஞ்சிகையான “சுவடுகளின்” முதல் மலர் கையெழுத்து ஆக்கங்களை பிரதி எடுத்துத் தொகுத்த பதிப்பாக வெளியானது. இது மாதாந்த சஞ்சிகையானபோதிலும் ஓர் இரு பதிப்புகள் இரு மாதங்களை இணைத்து வெளியானது. இந்த சஞ்சிகைக்கான குழு கையால் எழுதப்பட்ட ஆக்கங்கள் மற்றும் கையால் வரையப்பட்ட சித்திரப்படங்களை காகிதத்தில் வெட்டி ஒட்டினர். பின்னர் அவர்கள் அதனை நகலெடுத்து ஒன்றாகத் தொகுத்து A5 வடிவிலான சஞ்சிகையாக வெளியிட்டனர். இவை “saddle stitch binding with staples” என்ற முறையில் தொகுத்து வெளியிடப்பட்டது. பிற்காலத்தில் A5 வடிவில் வெளியான சஞ்சிகை பிற அளவு வடிவத்திலும் வெளிவந்தது.

இந்த சஞ்சிகைக் குழு 1988ம் ஆண்டு ஒக்டோபர் மாத காலத்தில் ஒரு தட்டச்சுப்பொறியைப் (typewriter) பெற்றது என்று அறியப்படுகின்றது. அவர்களது தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தனது தாயகத்தை சென்று வந்த போது ஒரு தட்டச்சுப்பொறியைக் கொண்டுவந்து கொடுத்தார். சுவடுகளின் இரண்டாவது மலர் 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாதி கையெழுத்தாகவும்  பாதி தட்டச்சுப்பொறி எழுத்தாகவும் வெளியானது. 1990 களில் இந்த சஞ்சிகைக் குழுவில் தொழில்நுட்பப் பணியாற்றியவர்கள் கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய ஒரு PC யைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். பிற்காலத்தில் சுவடுகள் சஞ்சிகை அச்சகப் பதிப்பாகவும் வெளியாகத் தொடங்கியது.

சுவடுகள் சஞ்சிகை அரசியல், கலை, பண்பாடு, புலம்பெயர் நாடுகளில் உள்ள சமூகச் சிக்கல்கள் மற்றும் விடுதலை அமைப்புகளின் ஒருசில நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களையும் உள்ளடக்கி வெளிவந்ததை இச்சஞ்சிகைக் குழுவினர் கூறினார்கள். அதை ஒரு நடுநிலைமையான நிறுவனமாக ஈழத்தில் நிகழ்ந்த அனைத்து விதமான மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகக் குரல் கொடுத்ததை அவர்கள் கூறினார்கள்.
இந்த சஞ்சிகை சிறுவர் சிறப்பிதழ், கலைஞர்கள் சிறப்பிதழ், பெண்கள் சிறப்பிதழ் ஆகியவையும் வெளியிட்டுள்ளது. இச்சஞ்சிகையின் இறுதிப் பதிப்பு 1997ம் ஆண்டு வெளியானது. இந்த சஞ்சிகை நோர்வே மற்றும் பிற நாடுகளுக்கு சந்தா அடிப்படையிலும் இலவசமாகவும் அனுப்பப்பட்டது.

1990 முதல் 1995 வரையிலான காலப் பகுதியில் சுவாடுகள் சஞ்சிகையின் பல பதிப்புகள் நோர்வே தேசிய நூலகத்தில் முன்னரேப் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அதோடு எண்ணிமக் களஞ்சியமான நூலக நிறுவனத்திலும் பல பதிப்புகள் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

சமூக-அரசியல் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள்

சுதந்திரதாகம் மற்றும் சுவடுகள் ஆகிய இரண்டு சஞ்சிகைகளை இரு கோணங்களிலிருந்து பார்க்கலாம். ஒன்று, இப்பணிகளை சூழ்ந்திருந்த அரசியல்-சமூகச் சூழல் முரண்படும் வேறுபாடும். இவை 1980 களில் இருந்த தமிழீழ விடுதலைப் போராட்டக் களச் சூழலையும் சமூக-அரசியல் சூழலையும் புலத்தில் எடுத்துக் கூறின. அதனால் இவை இப்போது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் பல கோணங்களைப் பிரதிபலிக்கும் “தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள்” ஆகின்றன.

அடுத்ததாக, இவை தமிழ் சமூக ஆவணங்கள் ஆகின்றன. இவ்விரு சஞ்சிகைகளும் மாறுபட்ட, ஆனால் அளுமைமிக்க சஞ்சிகைக் குழுக்களால் உருவாக்கப்பட்டது. அவை மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டன. இவ்விரு சஞ்சிகைக் குழுக்களின் உள்ளடக்க (editorial) வேலை மற்றும் தொழில்நுட்ப (technical) வேலைகளில் தன்னார்வ அடிப்படையில் செயல்பாட்டாளர்கள் பணியாற்றினார்கள். இவர்கள் அனைவரும் ஆண்கள். இரு சஞ்சிகைக் குழுவிலும் பெரும்பான்மையானவர்கள் தங்களது 20-கள் வயதில் இருந்தனர். அதில் ஒன்று அல்லது இரண்டு திருமணமான ஆண்கள் மட்டுமே இருந்திருக்கலாம் அல்லது மனைவி மற்றும் குடும்பத்தினர் தாயகத்தில் இருந்திருக்கலாம். இந்த ஆவணங்கள் புலத்தில் ஒரு தமிழ் சஞ்சிகையை வெளியிடுவதற்கான நடைமுறை சவால்களை எதிர்கொள்ள அனைவரும் மேற்கொண்ட பயணத்திற்கான சான்றாகின்றன. அவர்களது பயணம் ஒத்ததாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளன. அதில் துக்கம், காயம், மகிழ்ச்சி, சாதனை, தோல்வி என்று பல உணர்வுகளாலும் அனுபவங்களாலும் நிரம்பியுள்ளன. நோர்வேயில் வதிவிட வசதி நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும், நோர்வேயில் பொருளாதார சவால்களை எதிர்கொண்ட போதிலும், தாயகத்தில் வாழ்ந்த குடும்பத்தினர் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்த போதிலும், இந்த இளைஞர்கள் சமூகச் செயல்பாடுகளிற்கு அளித்த முன்னுரிமைக்கான சான்றாக இந்த சஞ்சிகைகள் அமைகின்றன. இதனால் இவை தமிழரின் சமூக ஆவணங்களாகவும் இன்று உள்ளன.

இதே போன்ற ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்களின் கதைகள் பதியப்பட வேண்டியவை. புலம்பெயர் தமிழரின் செயல்பாடுகளிற்கான மூல ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு, வரலாற்று ஆவணங்களாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் அவை தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியம் ஆகும். இவ்வாறான கதைகள் புலம்பெயர் வாழ் தமிழர் மற்றும் தாயக வாழ் தமிழரின் சமகால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு தனித்துவமான வரலாற்று அங்கமாக உள்ளன. அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தும் சிந்தனை நோக்குடன் இந்த கதைகளை பார்ப்பதற்கு பதிலாக புறநிலைப் பார்வை அவசியமாகின்றது. சமூக-அரசியல் கருத்தியல்பு நிலையிலிருந்து பார்ப்பது சமூகத்திற்கு ஆரோகியமனதாக இருக்கும். இதை ஒரு அரசியல் கருத்தியல்பு மட்டத்திலிருந்து கையாளும்போது எமக்கு அது நுண்ணறிவைத் தந்து பயனளிக்கும். சமூகத்தில் உள்ள பல்வேறு கதைகளை தெளிவாகப் புரிந்து கொள்ள அக்கதைகளை சீர்தூக்கி பார்ப்பதும் உள்நோக்குப் பெறுவதும் அவசியமாகின்றது. அதனால் ஒருவர் மாறுபட்ட கொள்கைகள் அல்லது முன்னோக்குகளுடன் உடன்படுகிறார் என்று அர்த்தப்படுத்த வேண்டியது அல்ல. இதற்கு மாறாக, இது சமூகத்தில் நிலவும் விமர்சனங்கள் மற்றும் முரண்பாடுகளின் யதார்த்தத்தை எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சமூக அணுகுமுறையாக இருக்கும். ஏனெனில் இவையும் ஈழத் தமிழரின் வரலாற்றில் ஒரு அங்கமாகும்.

வரலாறு எப்போதும் நமக்கு வழிகாட்டும்! ஆனால் அந்த வரலாறு நமக்கு வழிகாட்ட, அது முழுமையானதாக இருக்க வேண்டும்! அதனால்தான் தமிழ் சமூகத்தில் உள்ள அனைத்துக் கோணங்களையும் பார்வைகளையும் ஆவணப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். தனிநபர்களையும் தமிழ் அமைப்புகளையும் தமது வரலாற்றுப் பண்பாட்டு ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்கவும், பொது அணுக்கத்திற்கு விடுவதற்குமான திட்டத்தை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எவ்வாறு தமிழர் ஆவணங்களை புலத்தில் பாதுகாப்பாகப் பேணிப் பாதுகாக்கலாம் என்ற உங்கள் கருத்துகளை, சிந்தனைகளை, ஆலோசனைகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


மேலதிகம்:
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள்: பகுதி 1
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பாகம் 3: தொழில்நுட்ப அழிவிலிருந்து பேணிப் பாதுகாத்தல்


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.


வாய்மொழி வரலாறு நேர்காணல் மற்றும் ஏனைய தொடர்பாடல்கள்

முன்நாள் சுதந்திரதாகம் சஞ்சிகைக் குழுச் செயற்பாட்டாளர்கள்.
முன்நாள் சுவடுகள் சஞ்சிகைக் குழுச் செயற்பாட்டாளர்கள்.
மதக்குரு ஸ்டிக் உட்னெம் (Priest Stig Utnem).
முன்நாள் உதயம் செயற்பாட்டாளர்கள்.
முன்நாள் தமிழர் நலன்புரி மன்றம் செயற்பாட்டாளர்கள்.
முன்நாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்.
முன்நாள் தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடம் செயற்பாட்டாளர்கள்.
ஏனைய தமிழ் சமூகச் செயற்பாட்டாளர்கள்.


அடிக்குறிப்புகள்

1 «தமிழீழ விடுதலைப் போராட்டம்». 1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரையிலான காலப்பகுதியை ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றுக் காலமாகக் கணிக்கலாம். இந்தக் காலப்பகுதியில், ஈழத் தமிழர்கள் சம உரிமை, சம வாய்ப்பு, சுய நிர்ணய உரிமை, பேச்சுச் சுதந்திரம், தகவல் சுதந்திரம், தமது தாயகம், மொழி, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் இறையாண்மையை பேணிப் பாதுகாக்கும் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். இந்த விடுதலைப் போராட்டம் அகிம்சை வழிப் போராட்டம், அரசியல் வழிப் போராட்டம், ஆயுத வழிப் போராட்டம் மற்றும் தமிழ் இனவழிப்பிற்கு எதிரான போராட்டம் என்று பல கட்டப் போராட்டங்களாக இன்று வரைத் தொடர்கின்றது. ஒவ்வொரு கட்டப் போராட்டத்திலும், தமிழீழத்தை இலக்காகக் கொண்ட வெவ்வேறு அரசியல் அமைப்புகளும் விடுதலை அமைப்புகளும் போராடி வந்துள்ளனர். இருப்பினும், “ஈழத் தமிழ் தேசியத்தை மையப்படுத்திய கடந்த நூற்றாண்டின் இரண்டு முக்கிய அமைப்புகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி (Federal Party) மற்றும் அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) ஆகிய இரண்டு அமைப்புகளும் தமது செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகளில் தமிழ் பேசும் பிராந்தியங்களின் பொருளாதார மற்றும் வளங்களின் வளர்ச்சியை முக்கிய கூறுகளாக இணைத்தது குறிப்பிடத்தக்கது.” (Tamil Guardian, 2012. தமிழாக்கம்). இதனால் «தமிழீழ விடுதலைப் போராட்டம்» என்ற பதத்தை அறிந்தோ அறியாமலோ இந்த இரண்டு அமைப்புகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு ஒரு பரந்த அளவைக் கொண்டது. அது ஈழம், புலம்பெயர் தமிழர் மற்றும் தமிழ்நாடு ஆகியத் தளங்களைக் கொண்ட ஓர் வரலாறு ஆகும். அது பல அரசியல் மற்றும் விடுதலை அமைப்புகளைக் கொண்ட அகிம்சை, அரசியல், ஆயுத வழி மற்றும் இனவழிப்பு என்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு ஆகும்.

2 «Den som kontrollerer fortiden styrer fremtiden. Den som styrer nåtiden, kontrollerer fortiden.» (Norwegian). “1984” (2017) எனும் நோர்வேயிய நூலிலிருந்து தமிழாக்கம்.
George Orwell. (2017). 1984. Oslo: Gyldendal.
அதன் ஆங்கிலம்: «Who controls the past controls the future. Who controls the present controls the past»
George Orwell. (n.a). 1984: Part 1, Chapter 3. Retrieved from http://george-orwell.org/1984/2.html

3 Tamil Niram. (19.11.2020). தலைவர் பிரபாகரன் மனதை மாற்றிய ஆண்டன் பாலசிங்கம் | Jegath Gaspar Revels Untold Secrets. Retrieved from https://youtu.be/30c7_slg6M0

4Peter Schalk (பீட்டர் ஷால்க்) பேராசிரியர் ஆழ்வாப்பிள்ளை வேலுப்பிள்ளையுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் 1995 மற்றும் 2005ம் ஆண்டு வெளியான தலைவரின் சிந்தனைகள் எனும் தமிழ் மொழியில் வெளியான மூலப் பதிப்பை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டார். இப்பணியில் யேர்மன், ஆங்கிலம், ஸ்வீடிஷ் மற்றும் சிங்கள மொழிகளிலான மொழிபெயர்ப்புகளும் உள்ளடங்கும்.

5வாய்மொழி வரலாறு என்பது வாய்மொழிப் பாரம்பரியமாக இருக்கும் அறிவை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப் பதிவு செய்து ஆவணப்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும்.

6ப்ரூனிசுண்ட் (Brønnøysund) பதிவு மையத்தின் அடிப்படையில், நோர்வேயில் “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு” நிறுவப்பட்ட திகதி 05.07.2014 என பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வாய்மொழி வரலாற்று நேர்காணல்கள் மற்றும் ஆவணப் பொருட்களின் அடிப்படையில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வரலாறு 1983ம் ஆண்டு வரை பின்னோக்கிச் செல்கின்றது. இது பின்னர் 2014ம் ஆண்டு ப்ரூனிசுண்ட் (Brønnøysund) பதிவு மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணையத்தளம்: https://w2.brreg.no/enhet/sok/detalj.jsp?orgnr=913969081

7தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை
Tamil Information Center. (n.a.). The Thimbu Talks: 1985 Sinhala-Tamil conflict and the Indian factor. London: Tamil Information Center. Retrieved from https://tharavu.no/wp-content/uploads/2019/11/5-thimpu-1985.pdf

தாயாகம். (10.04.2020). தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகள் முன்வைத்த திம்புப் பேச்சுவார்த்தை.!. Retrieved from https://www.thaarakam.com/news/122314

அரசியல் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள். (n.a.). சோசலிசத் தமிழீழம்: விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம். தமிழீழ விடுதலைப் புலிகள். Retreived from http://eelamhouse.com/docs/books/socialist-tamil-eelam.pdf

8 ப்ரூனிசுண்ட் (Brønnøysund) பதிவு மையத்தின் அடிப்படையில், “தமிழ்-நோர்வேஜிய இணைவுகூடம்” நிறுவப்பட்ட திகதி 26.09.1988 என பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வாய்மொழி வரலாற்று நேர்காணல்களின் அடிப்படையில், தமிழ்-நோர்வே மக்கள் இணைவுகூடத்தின் வரலாறு 1987ம் ஆண்டு வரை பின்னோக்கிச் செல்கின்றது. இது பின்னர் 1988ம் ஆண்டு ப்ரூனிசுண்ட் (Brønnøysund) பதிவு மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணையத்தளம்: https://w2.brreg.no/enhet/sok/detalj.jsp?orgnr=992938730

மேற்கோள்கள்

விடுதலைப் புலிகள்: தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வமான ஏடு. (1985). தமிழீழ விடுதலை இயக்கங்கள் இணைந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள்.

Nimirvu. (19.11.2020). தமிழ் மக்களும் நினைவுகூரல் உரிமையும். Retreived from https://youtu.be/z29QIMDdAI8

Schalk, P. (2007a). talaivarin cintanaikai. Retrieved from http://uu.diva-portal.org/smash/get/diva2:173420/FULLTEXT04.pdf

Schalk, P. (2007b). Tamil Source in English Translation: Reflections of the Leader. Retrieved from http://uu.diva-portal.org/smash/get/diva2:173420/FULLTEXT06.pdf

Schalk, P. (2007c). Uppsala University Publications. Retrieved from http://uu.diva-portal.org/smash/record.jsf?amp;dswid=contents&pid=diva2%3A173420&dswid=5816

Tamil Guardian. (2012). Stamp of defiance and aspiration. Retrieved from https://www.tamilguardian.com/content/stamp-defiance-and-aspiration

TamilNet. (2008). Eezham Thamizh and Tamil Eelam: Understanding the terminologies of identity. Retrieved from https://www.tamilnet.com/art.html?catid=99&artid=27012

TCC Norway. (2015a). OSLO – சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வு. Retrieved from http://www.tccnorway.no/events/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

TCC Norway. (2015b). சுதந்திரதாகம். Retrieved from http://www.tccnorway.no/suthanthirathakam/

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 28.12.2020

3 thoughts on “தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பகுதி 2: நோர்வேயிலிருந்து வெளியான இரண்டு தமிழ் சஞ்சிகைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s