′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 2

16. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

ஏன் தமிழரிடத்தில் «பதிவு» / «ஆவணம்» பற்றிய போதிய புரிதல் இல்லை?

கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்ட சங்க காலம் மற்றும் தமிழ் வரிவடிவமான «தமிழ் பிராமி»யை, கீழடி தொல்பொருள் சான்றுகள் இன்னும் சுமார் 300 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தியுள்ளது. அதாவது கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் நாகரீகம் பெற்ற ஓர் குடியாக வாழ்ந்தார்கள் என்றதற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டது.
ஏனெனில், சுமார் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் நாகரீகம் பெற்ற ஓர் குடியாக வாழ்ந்தார்கள் என்றால், எப்பொழுது தமிழ் நாகரீகம் வளர ஆரம்பித்தது என்ற கேள்வி எழுகின்றது.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மண் பானைகளின் கீறல்கள், தமிழர் அன்றே தமிழ் எழுத்துக்களான தமிழ் பிராமியை பயன்படுத்தி, அவை யாருக்கு சொந்தமானவை என்பதை அடையாளப்படுத்தியுள்ளனர். இதுவும் ஒரு பதிவுதான். இன்னும் ஓர் உதாரணம், தமிழ் மன்னர்கள் தமது வரலாற்றை கல்வெட்டுகளாக ஆவணப்படுத்தியுள்ளமை.

ஒப்பிடுவதற்கான தகவலுக்கு:
https://www.bbc.com/tamil/india-49754995
https://worldtamilforum.com/his…/14th-century-inscription-2/
https://www.tamilnet.com/art.html?catid=13&artid=37488
https://www.tamilnet.com/art.html?catid=79&artid=35707
http://conf.jfn.ac.lk/…/JUICE2014-Tamil%20Brahmi%20Inscript…
https://www.archaeology.lk/6532

“தனியார் ஆவணம்” (private archive) மற்றும் நோர்வேயிய ஆவணக்காப்புச் சட்டம்

தமிழர்கள் புலம்பெயர்ந்த காலம் முதல் அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவான தமிழ் அமைப்புகளுக்கான இயங்கு சக்திகளாக இருந்து வந்துள்ளனர். மறுபுறம், பல தமிழர்கள் தனி மனித கலைஞர்களாக அல்லது படைப்பாளிகளாக செயற்பட்டு வருகின்றனர்.
தனிநபர்களால் உருவாக்கப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட பதிவுகள் பொதுவாக “சேகரிப்பு” (collection) அல்லது “தனிநபர் ஆவணம்” (personal archive) என்று அழைக்கப்படுகின்றன. தனிநபர்களால் உருவாக்கப்பட்ட பதிவுகள் சமூகத்துடனான தொடர்பாடலின் விளைவாக இருக்கலாம், ஆனால் அவசியம் அல்ல. இருப்பினும், தமிழ் அமைப்புகள், ஏனைய அமைப்புகளைப் போலவே, சமூக தொடர்பாடலின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.

நோர்வே ஆவணக்காப்பகச் சட்டத்தின்படி, அரசாங்க அமைப்புகளைத் தவிர அனைத்து நிறுவன கட்டமைப்புகளும் “தனியார் நிறுவனங்கள்” (private organisation) ஆகும். எனவே, அவை “தனியார் ஆவணத்தை” (private archive) உருவாக்குகின்றன. “தனியார் ஆவணம்” பல பிரிவுகளில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் பதிவுகள் ஒரு “நிறுவன ஆவணம்” (organisational archive) ஆகும். “தனிநபர் ஆவணம்” (personal archive) மற்றும் “சேகரிப்பு” (collection) என்பது “தனியார் ஆவணத்தின்” மேலும் இரண்டு பிரிவுகள் ஆகும்.
நோர்வே ஆவணக்காப்பகச் சட்டத்தின்படி, தனியார் நிறுவனங்கள் பதிவுகளை வைத்திருக்க வேண்டும் என்பது கடமை அல்ல (பொருளாதாரம் சார்ந்த ஆவணத்தைத் தவிர்த்து). அதோடு தனியார் நிறுவனங்கள் தமது பதிவுகளை நீண்டகால ஆவணக்காப்பிற்காக கொடுக்க வேண்டும் என்ற கடமையும் இல்லை. ஆயினும்கூட, பெரும்பாலான நோர்வேயிய தனியார் நிறுவனங்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களது சொந்த நிர்வாக பயன்பாட்டிற்காக, மேற்பார்வை ஒழுங்கிற்காக மற்றும் ஜனநாயகத்திற்காக ஒழுங்கமைக்கப்பட்ட பதிவேட்டு நடைமுறையை மேற்கொள்கின்றனர்.
இன்நிலையால் நோர்வே ஆவணக்காப்பக நிறுவனங்கள் “தனியார் ஆவணங்களை” (private archive) விரும்பவில்லை என்பது அர்த்தம் அல்ல. இதனை அழுத்திக் கூற விரும்புகின்றேன். அவர்களிடம் “தனியார் ஆவணங்கள்” (private archive) பற்றாக்குறையாக உள்ளது. அதிலும் புலம்பெயர் சமூகங்களுடைய ஆவணங்கள் பற்றாக்குறையாக உள்ளது.

பிரதிகூலம்: “தனியார் நிறுவனங்களுக்கு” (private organisation) பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் “கட்டாயக் கடமை அல்ல

நோர்வேயிய ஆவணக்காப்புச் சட்டத்தின் அடிப்படையில் “தனியார் நிறுவனங்களுக்கு” (private organisation) பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் “கட்டாயக் கடமை” அல்ல. இதன் விளைவு தனியார் நிறுவனங்களுக்கு பெரும் ஆபத்தைத் தருகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்த சமூகத்தினரின் அமைப்புகளின் ஆவணங்கள் ஆவணக்காப்பிலிருந்து விடுபட்டுப் போகும் ஆபத்தை இன்னும் அதிகரிக்கின்றது. ஏனெனில் ஆவணங்கள் எங்கள் உரிமைகளை நிலைநாட்டி, வரலாற்றில் எமது இருப்பை நிலைநிறுத்தும் ஆதாரங்கள் ஆகும்.
05ம் திகதி யூன் மாதம் 2020 அன்று எனது இடுகையில் நான் எழுதியது போல, நோர்வே ஆவணக்காப்பக நிறுவனங்களில் தமிழ் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் (historical and cultural heritage) தடயங்கள் எதுவும் இல்லை.

மறு புறம், தமிழர்கள் தங்களது ஆவணங்களை அரசு தொடர்புபட்ட ஆவணக்காப்பக நிறுவனங்களுக்கு வழங்குவதில் சந்தேகமும் அச்சமும் கொண்டிருப்பதையும் நான் அவதானித்தேன். இதைப் பற்றி எனது எதிர்கால இடுகைகளில் எழுதுகின்றேன்.

«ஆவணக்காப்பகக் கடமை” இல்லாதது ஆவணக்காப்பகத்தைப் பற்றிய புரிதல் அல்லது விழிப்புணர்வை மட்டுப்படுத்துகின்றது. ஏனெனில் ஆவணகாப்பகத்தைப் பற்றி சிந்திப்பதற்கான தேவையை அது வலியுறுத்தவில்லை. என்றாலும் தனியார் நிறுவனங்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த சமூகத்தினரின் அமைப்புகளுக்கு அவர்களின் நிர்வாகக் கட்டுப்பாடு, ஜனநாயகம் மற்றும் பண்பாட்டு, வரலாற்று நடவடிக்கைகளை பதிவு செய்ய ஆவணக்காப்பக விழிப்புணர்வும் அறிவூட்டலும் அத்தியாவசியமானது.

ஆவணக்காப்பு பற்றிய புரிதல் அல்லது விழிப்புணர்வு இல்லாததற்கான இன்னுமோர் முக்கிய காரணி என்னவென்றால், தமிழர்கள் ஏற்கனவே தன்னார்வலர்களாக பணியாற்றுபவர்கள். ஒரு தமிழ் அமைப்பை இயக்குவதற்கு தங்களது ஓய்வு நேரத்தை தியாகம் செய்கிறார்கள். தமிழ் அமைப்புகளுக்கு ஏற்கனவே மனிதவளம், பொருள் வளம் மற்றும் நேரப்பற்றாக்குறை உள்ளது. என்றாலும் அவர்கள் ஒரு சமூகப் பொறுப்பையும் தாங்கி நிற்கின்றார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. இதைப் பற்றி எனது அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

தொடரும்…

அடுத்த இடுகை: ′′ஆவணம்′′ என்றால் என்ன”? – பகுதி 3: ஏன் தமிழ் அமைப்புகள் பதிவுகளை உருவாக்க வேண்டும்?

தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றுப், பாரம்பரியத்தின் (cultural and historical heritage) ஒரு சிறிய பகுதியை உங்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்கள் என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். அதன் பொது அணுகலுக்கு (public access) வழியமையுங்கள்.


உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 20. செப்டம்பர் 2020

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s