05. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.
நோர்வே வாழ் தமிழர்கள், ஏனைய புலம்பெயர் வாழ் தமிழர்கள் போன்று, தமது மொழி, பண்பாடு, வரலாறு, புலம்பெயர்வு, சமூக கட்டமைப்பு, தாயக வாழ்க்கை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை ஆகியவற்றை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர்.
நோர்வேயில் வாழும் தனிநபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை பல்வேறு வழிகளில் மேற்கொள்கின்றனர். அச்செயல்பாடுகள் மிகவும் வரவேற்க்கத்தக்கது. அவை நிகழ்கால மற்றும் எதிர்கால தலைமுறையினரின் சமூக வளர்ச்சியில் பாரிய பொறுப்பைக் கொண்டுள்ளது.
ஆவணங்களை பாதுகாத்து, ஆவணப்படுத்துவதின் நோக்கம், அவற்றை பொது அணுகலுக்கு (pubic access) கிடைக்க செய்வதே ஆகும். ஆவணங்கள் பொது அணுகலுக்கும் பொது பயன்பாட்டிற்கும் கிடைக்கும் போதுதான் வரலாறு அறியப்பட்டு, நினைவு கூறப்படும். இல்லையெனில் ஆவணங்கள் இனம் காணப்படாமல், மறைக்கப்பட்டுவிடும். வரலாறு பின்னர் மறக்கப்பட்டுவிடும்.
இதை தடுக்க ஆவணங்கள் பொது அணுகலுடன் பாதுகாக்கப்பட வேண்டும். டிஜிட்டல் (digital) அணுகல் அல்லது நேரடி அணுகல் மூலம் பொது அணுகலுக்கு வழியமைக்கலாம்.
டிஜிட்டல் (digital) வடிவில் பொது அணுகலுக்கு ஓர் உதாரணம் நூலக நிறுவனம்.
http://noolahamfoundation.org/web/
அல்லது, நோர்வேஜிய ஆவணக்காப்பக நிறுவனங்களில் எங்கள் ஆவணங்களை பாதுகாப்பதன் மூலம் பொது அணுகலுக்கு வழியமைக்கலாம். கவலைக்குரிய நிலை என்னவென்றால், நோர்வேஜிய ஆவணக்காப்பக நிறுவனங்களில் நோர்வேஜிய-தமிழ் பண்பாட்டு பாரம்பரியத்தைப் (cultural heritage) பற்றிப் பிரதிபலிக்க எந்த ஒரு ஆவணங்களும் இல்லை.
ஆவணங்களை பாதுகாத்தல் மற்றும் ஆவணப்படுத்தல்; ஆவணங்களை நோர்வேயிய ஆவணக்காப்பக நிறுவனங்களில் நீண்ட கால ஆவணப்படுத்தல் தொடர்பாக தமிழரிடம் பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் உள்ளதை நான் அவதானித்தேன்.
பெரும்பாலும் தமிழர்கள் தமது ஆவணங்களை தம்மகத்தே அதிகூடிய பாதுகாத்தல் அடிப்படையில் வைத்துள்ளனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாத்தலால் ஆவணங்கள் மறைக்கப்பட்டும், இழந்து போகும் நிலையை உருவாக்குகின்றன. அதனால் நாமும், எமது எதிர்கால தலைமுறைகளும் எமது பண்பாட்டு பாரம்பரியத்தை (cultural heritage) அறிய முடியாத, இழந்த நிலையையே உருவாக்குகின்றது.
தமிழ் பண்பாடு, வரலாறு, பாரம்பரியத்தின் (cultural and historical heritage) ஒரு சிறிய பகுதியை உங்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்கள் என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். அதனை பொது அணுகளுக்கு (public access) வழியமையுங்கள்.
உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.