புலம்பெயர் வாய்மொழி ஆவணகம்

உலகத் தமிழர் அனைவருக்கும் புலம்பெயர் தமிழ் ஆவணகத்தின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எனது பெயர் பகீரதி குமரேந்திரன். எனக்கு புலம்பெயர் தமிழரின் வரலாற்றில் ஆர்வம் உள்ளது. எனது கல்வித் தகைமையில் கற்பித்தலும் ஒன்று. எனவே தமிழ் பள்ளிகள் மற்றும் ஏனைய அறிவு மையங்கள் தாய்மொழி அறிவு, அடையாள மேம்பாடு, சமூகப் புரிந்துணர்வு ஆகியவற்றில் கொண்டுள்ள பங்கு பற்றி அறிய ஆர்வம் கொண்டேன். இவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு நூலை 2017ம் ஆண்டு ஆரம்பித்தேன்.

புலம்பெயர் வரலாற்றின் இன்றைய நிலைமை

ஒரு எழுத்தாளர் தேசிய ஆவணகங்களுக்குச் சென்று ஒரு எழுத்து வேலைத்திட்டத்திற்கான தகவல்களைப் பெறலாம். இந்த தேசிய ஆவணகங்கள் ஒரு தேசத்தின் ஞாபகக் களஞ்சியங்கள் ஆகும். சமூகத்தின் பெரும்பாலான விடயங்கள் தொடர்பான ஏராளமான ஆவணப் பொருட்களை அவை சேமித்து வைக்கின்றன: மொழி, பண்பாடு, வரலாறு, சட்டம், அரசியல், என்று ஒரு சில விடயங்களைக் குறிப்பிடலாம். அங்கு பல ஆண்டுகளாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட நூல்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் போன்றவை இருக்கும். அவற்றில் வரலாற்று மதிப்புமிக்க புகைப்படங்கள், திரைப்படங்கள், ஒலிப் பதிவுகளும் அடங்கும். அங்கு பாரம்பரிய மற்றும் எண்ணிம வடிவில் ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

எழுத்தாளர்கள் மட்டுமல்ல, ஆய்வாளர்கள், மாணவர்கள், படைப்பாளிகள் மற்றும் பெரும்பாலான பொது மக்கள் இந்த ஆவணகங்களைப் பயன்படுத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரை, எனது நூல் திட்டத்திற்கான ஆவணப்பொருட்களைத் தேட அணுகியபோது அங்கு தமிழர்கள் பற்றிய ஆவணங்கள் மிகவும் அரிதாகவே இருந்தன. பல்வேறு புலம்பெயர் சமூகங்கள் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவதற்கான முறையான தகவல் அமைப்புகள் ( information system) இன்னும் அங்கு இல்லை. நோர்வேத் தமிழர்களின் வரலாறு பற்றிய ஆவணங்கள் பொதுவாக போதுமானவையாக இல்லை. பல இடங்களில் சிதறிக்கிடக்கின்றன. உதாரணமாக பத்திரிகைகளில் வந்த செய்திகளாகவும் கட்டுரைகளாகவும், தமிழ் பள்ளிகள், கழகங்கள் மற்றும் தனியார் ஆவணச் சேகரிப்புகளாகவும் உள்ளன. இதனால் பொது அணுக்கம் கடினமாகின்றது. மேலும் இந்த ஆவணங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கான பொறுப்பு சிதறடிக்கப்பட்டுள்ளது.

DsporA Tamil Archive – புலம்பெயர் தமிழ் ஆவணகம்

நாம் வாழும் நாட்டின் தேசிய ஆவணகங்கள் செயற்பாட்டில் வரும் வரை காத்திருந்தால், பாரிய அளவிலான வரலாற்று மதிப்புமிக்க அறிவை என்றென்றும் இழக்க நேரிடும். நமது வரலாற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கு தமிழர்களான எங்களுக்கு ஒரு சுயாதீனமான பொறுப்பு உள்ளது. நான் ஆரம்பித்த நூல் திட்டம் புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கான ஆவணகங்கள் தேவை என்பதனை எனக்கு உணர்த்தியது. குறிப்பாக பாரம்பரிய ஆவணகங்கள். 2019ம் ஆண்டு நான் ஆரம்பித்த ஆவண அறிவியல் கல்வி இச்சிந்தனைக்கு மேலும் வலுச்சேர்த்தது. அதனால் இணையவழி ஆவணகத்தை உருவாக்கி இயக்கவும் ஆவண விழிப்புணர்வை உருவாக்கி மேம்படுத்தவும் எனது நூல் திட்டத்தை உறங்கு நிலையில் வைத்தேன்.

DsporA தமிழ் ஆவணகத்தின் இணையத்தளம், www.dspora.no, 22. யூலை 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப நோக்கம்:

  • ஆவணப்படுத்தல் விழிப்புணர்வு (archival awareness)
  • ஆவணப் பரப்புதல் (archive dissemination)

வாய்மொழி வரலாறு

அச்சிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற தொட்டுணரக்கூடிய வரலாற்று ஆவணங்களைச் சேகரித்துப் பேணிப் பாதுகாப்பது ஒரு விடயம். ஆனால் புலத்திற்கு புலம்பெயர்ந்த முதல் தமிழர்கள் மற்றும் இங்கு பிறந்து வளரும் தமிழர்களின் அனுபவங்கள் சிறிய அளவிலேயே எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் புலம்பெயர்ந்த முதல் தலைமுறை தமிழர்கள் நம்மிடையே இல்லாத காலம் வரும்போது என்ன நடக்கும்? இங்குள்ள ஆரம்பகாலத் தமிழ் சமூகம் எவ்வாறு உருவானது, எவ்வாறு வளர்ந்தது என்பதைப் பற்றிக் கூற முடியுமா? அவர்களின் நினைவுகளையும் அனுபவங்களையும் சேமிக்கும் களஞ்சியம் புலம்பெயர் தமிழருக்கு தேவையானதொன்றாக உள்ளது.

2021ம் ஆண்டு தமிழர் திருநாளில் நளாயினி இந்திரன் (ஐக்கிய இராச்சியம்) மற்றும் மீரா திருச்செல்வம் (நோர்வே) ஆகியோரின் வாய்மொழி வரலாற்றை உள்ளடக்கி புலம்பெயர் தமிழ் ஆவணகம் தனது வாய்மொழி வரலாற்று ஆவணகத்தை ஆரம்பிக்கின்றது. தமது வாய்மொழி வரலாற்றை எம்முடன் பகிர்து கொண்ட நளாயினி இந்திரன் மற்றும் மீரா திருச்செல்வம் ஆகியோருக்கும், இப்பபணியில் துணை நின்ற சிக்குன் இராஜேந்திரம் (Sigrun Rajendram), எனது தாயாரான சாந்தி குமரேந்திரன் மற்றும் பியோர்ன் ஏனெஸ் (Bjørn Enes, Memoar.no) ஆகியோருக்கு எனது அன்பார்ந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்,
பகீரதி குமரேந்திரன்


புதுப்பிக்கப்பட்டது│Updated : 27.01.2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s