தனிநபர் ஆவணம்: பேர்கன் நகர ஆவணகத்தைப் பார்வையிட்ட தமிழர்கள்

English

பிலோமினம்மா ஜோர்ஜின் குடும்ப உறுப்பினர்கள் வியாழக்கிழமை 27 ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 2020 அன்று பேர்கன் நகர ஆவணகத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர். கரோலின் தேவனாதன், ஜெரின்மேரி ஜோர்ஜ் கிசெருட் மற்றும் தோமாய் மதுதீனு ஜோர்ஜ் ஆகியோர் பேர்கன் நகர ஆவணகத்துடன் மேற்கொண்ட இரண்டாவது தமிழர் சந்திப்பு ஆகும். அதே ஆவணகத்தை 26. யூன் 2020 அன்று பார்வையிட்ட முதலாவது தமிழர் ஜூலியஸ் அன்டோனிப்பிள்ளை ஆவார். இவர் உள்ளூர் தமிழ் வானொலியான “தேன் தமிழ் ஓசை” (“Radio Tamil Bergen”) இன் பொறுப்பாளர். ஜூலியஸ் மற்றும் பிலோமினம்மாவின் குடும்பத்தினர் ஒரு ஆவணகத்தைப் பார்வையிட்டது இதுவே முதல் முறை ஆகும். அதேபோல் தமிழர்கள் தமது வரலாற்றை ஆவணப்படுத்துவதற்காக பேர்கன் நகர ஆவணகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுடனான சந்திப்புகளை மேற்கொண்டதும் பேர்கன் நகர ஆவணகத்துக்கும் இதுவே முதல்முறை ஆகும்.

பிலோமினம்மா ஜோர்ஜ் 1987 இல் நோர்வேக்கு புலம்பெயர்ந்தார். ஈழத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியராக இருந்த அவர், 1988 இல் பேர்கன் நகராட்சியில் உள்ள நோர்வேயிய அரசு பள்ளிகளில் தமிழ் தாய்மொழி ஆசிரியராக பணிபுரிய ஆரம்பித்தார். அதே நேரத்தில், அவர் பேர்கன் தமிழ் சிறுவர் பாடசாலையிலும் தாய்மொழி ஆசிரியராக தொண்டாற்ற ஆரம்பித்தார். இப்பள்ளி 1987 ஆம் ஆண்டு நோர்வேயில் ஆரம்பித்த முதல் தமிழ் பள்ளி ஆகும். பின்னர் 2002 ஆம் ஆண்டு ஆரம்பித்த அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம், பேர்கன் வளாகத்தில் பணி புரிந்தார்.
பிலோமினம்மாவும் அவரது கணவரும் 2004 ஆம் ஆண்டு போர் நிறுத்த காலப்பகுதியில் ஈழத்திற்கு திரும்பக் குடிபெயர்ந்தனர். அங்கு வன்னியில் இருந்த காந்தரூபன் அறிவுச்சோலையில்1 ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்த அவர் டிசம்பர் 2004 சுனாமியில் சாவடைந்தார். அவரது தாயகமான ஈழத்தில் அடக்கம் செய்யப்பட்டார். புலத்திலும் தாயகத்திலும் அவர் ஆற்றிய சமூகப் பணியை மதிப்பளிக்கும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் “நாட்டுப்பற்றாளர்” என்று மதிப்பளிக்கப்பட்டார்.

ஜூலியஸ் அன்டோனிபிள்ளை தனது “அமைப்பின் உள்ளக ஆவணத்தை” (“organisation archive”) ஆவணப்படுத்துவது பற்றி அறிந்து கொள்ள பேர்கன் நகர ஆவணகத்தைச் சென்று பார்வையிட்டிருந்தார். ஆனால் பிலோமினம்மாவின் குடும்பத்தினர் பிலோமினம்மாவின் “தனிநபர் ஆவணத்தை” (“personal archive”) ஆவணப்படுத்துவது தொடர்பாக அதே நிறுவனத்திற்குச் சென்றிருந்தனர். இவை “தனியார் ஆவணம்” (private archive) எனும் கிழையின் இரு வெவ்வேறு ஆவண வகை ஆகும். தாய்மொழி ஆசிரியரான பிலோமினம்மா “தமிழ் 1” (1995) என்ற நூலை எழுதினார். இது தேசிய கற்பித்தல் உதவி மையத்தின் ஆதரவுடன் நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல் ஆகும். பேர்கன் நகர ஆவணகம் பிலோமினம்மா குடும்பத்தினரிடம் அவரது தயாரிப்புகள் மற்றும் அவர் மேற்கொண்ட வேலைகளை சேகரிக்குமாறு ஊக்குவித்தது. அதில் வெளியிடப்படா தமிழ் கவிதைகள், உரைகள் மற்றும் “தமிழ் 1” மற்றும் “தமிழ் 2” (1997) நூல்களிற்காக கையெழுத்துப் பிரதிகளான திட்டமிடல்கள், புகைப்படங்கள், குறுவட்டு, ஆல்பங்கள் அல்லது பிற படைப்புகளும் அடங்கலாம்.

கரோலின் தெவநாதன் (பிலோமினம்மா ஜோர்ஜின் மகள்) DsporA Tamil Archive இடம் பேர்கன் நகர ஆவணகத்திற்குள் இருந்தபோது அவரது குடும்பத்தினர் எவ்வளவு ஆச்சரியமும் பூரிப்பும் அடைந்தனர் என்று கூறினார். அந்த ஆவணகம் பேணிப் பாதுகாக்கும் பொருட்கள் எவ்வாறு எந்தவொரு அழிவிலிருந்தும் பேணிப் பாதுகாக்குகின்றது என்பதை அவர்களுக்கு அறிவித்து சுற்றிக் காண்பித்தது. அத்துடன் பொது அணுக்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும் விளக்கியது. பேணிப் பாதுகாக்கும் பகுதி ஒரு மலையை குடைந்து அதனுள் வைக்கப்பட்டுள்ளது. அந்த மலைச் சுவர்கள் ஒரே வெப்பநிலையை பராமரிப்பதற்கான கட்டுமாணம் செய்யப்பட்டுள்ளதைக் கூறினார். ஏனெனில் வெப்பநிலையைகூட காலப்போக்கில் ஒரு காகிதத்தை சேதப்படுத்தும்.

தமிழர்கள் அனுபவித்த அடக்குமுறை வரலாறு குறித்தும் பிலோமினம்மா குடும்பம் பேசியிருந்தனர். தமிழர்கள் தாயகத்தில் தகவல் உரிமைக்கான தடை அனுபவித்ததன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவற் உருவாக்கத்தைப் பற்றி உரையாடியிந்துனர். அதற்கு நோர்வேயிய ஆவணகங்களின் செயற்பாட்டை அந்த ஆவணக நிறுவனம் கூறியாது. இங்கு அனைத்து வகையான ஆவணப் பொருட்களையும் ஆவணப்படுத்தும் செயற்பாட்டையே நோர்வேயிய ஆவணகங்கள் கொண்டுள்ளன. அதில் வேறுபாடான அல்லது எதிர்ப்பான அரசியல் கருத்துகள், அனுபவங்கள் மற்றும் வரலாறு ஆகியவற்றையும் உள்ளடங்கும். நோர்வே ஆவணகங்களின் செயற்பாடு இந்த நாட்டில் ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டுபாட்டிற்குப் பங்களிக்கின்றது.

ஒரு பரவலான அழைப்பு

கரோலின் தேவனாதன் பேர்கன் நகர ஆவணகம் தந்த ஓர் பரவலான அழைப்பைத் தெரிவித்தார். தமிழ் கலை, பண்பாடு மற்றும் வரலாற்றை ஆவணப்படுத்த தனிநபர்களையும் தமிழ் அமைப்புகளையும் அவர்கள் வரவேற்க ஆர்வமாக உள்ளனர்.
ஜூலியஸ் அன்டோனிப்பிள்ளை மற்றும் பிலோமினம்மா குடும்பத்தினர் பேர்கன் நகர ஆவணகத்திற்கு அவர்கள் சென்று வந்த அனுபவங்களையும் சிந்தித்தனைகையும் குறித்து ஏனைய தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றார்கள். இதற்கான முதல் கட்டமாக தமிழர்கள் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். பின்னர் உங்கள் இடத்தில் இருக்கும் ஒரு தேசிய, மாவட்ட அல்லது நகராட்சி ஆவணகத்தைச் சென்று பார்வையிட ஓர் வாய்ப்பளியுங்கள்.

தமிழ் கலை, பண்பாடு மற்றும் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவதற்கு ஆவணப்படுத்தல் பற்றிய புரிதலை பெற்றுக் கொள்வற்கான வாய்ப்பை அளித்தமைக்கு நோர்வேக்குப் புயம்பெயர்ந்த முதல் தலைமுறை தமிழர்களுக்கு நன்றிகள். அதோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை தமிழர்கள் தங்களது தனிப்பட்ட அல்லது தங்களது அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் ஆவணப்படுத்தல் எனும் செயற்பட்டைக் கொண்டுவருவதை DsporA Tamil Archive ஊக்குவிக்கின்றது.


பின்குறிப்பு
1 “காந்தரூபன் அறிவுச்சோலை” ஈழப் போரில் பெற்றோரை இழந்த ஆண் பிள்ளைகளுக்கென அமைக்கப்பட்ட இல்லம் ஆகும். அதேபோல், “செஞ்சோலை சிறுவர் இல்லம்” பெண் பிள்ளைகளுக்கான இல்லமாகும்.


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 18.10.2020

One thought on “தனிநபர் ஆவணம்: பேர்கன் நகர ஆவணகத்தைப் பார்வையிட்ட தமிழர்கள்

Comments are closed.