′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 6

ஆவணகத்தில் ஆவணங்களை ஆவணப்படுத்தல்

நோர்வே வாழ் தமிழர்களின் ஆவணங்கள் என்று 1970கள், 1980கள் மற்றும் 1990 களில் உருவாக்கப்பட்டவையே நோர்வேயிய ஆவணகங்களில் (archive institution/ archive depot) உள்ளன. அவை «Redd Barna» (சிறுவர்களின் நலனை மையப்படுத்திய நோர்வேயிய தன்னார்வ அமைப்பு), «Innvandreretaten» (புலம்பெயர்வோர் நிர்வாகம்), «tolkeseksjonen» (பொழிபெயர்ப்புப் பிரிவு/ interpreting section), «Flyktning og Innvandreretaten» (அகதிகள் மற்றும் குடிவரவு சேவை) (குடிவரவு சேவை மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான செயலகம் ஆகியவற்றின் இணைப்பு). இதோடு 2000 ஆம் ஆண்டுகளின் மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட முதுகலை மற்றும் முனைவர் ஆய்வறிக்கைகள்.

இதில் சிலவற்றை நோர்வேயிய எண்ணியம் (digital) ஆவணத் தளமான «Arkivportalen.no» இல் “Tamil” என்ற தேடலின் முடிவாக காணலாம்:
https://www.arkivportalen.no/search?text=tamil
ஏனைய ஆவணங்கள் குறைந்தபட்சம் 60 ஆண்டுகளுக்கு பொது அணுகலிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இது தனிநபர்களின் தனியுரிமைக் கொள்கையைப் (privacy policy/ personvern) பாதுகாக்க செய்யப்படுகிறது.

இவை நோர்வே அரசாங்க அமைப்புகள் மற்றும் சர்வதேச உதவி அமைப்புகளின் ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்களின் அடிப்படையில் நோர்வே வாழ் தமிழர்கள் சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன் இங்கு அகதிகளாக புலம்பெயர்ந்த காலத்திலேயே உறைந்து போய் நிற்கின்றது. இந்த தமிழர்களின் வளர்ச்சியைப் பற்றி சொல்லும் வரலாற்று ஆவணங்கள் எங்கே? நோர்வேக்கு புலம்பெயர்ந்த அனைத்து தமிழர்களும் அகதிகளாகத்தான் வந்தார்களா? புலம்பெயர்ந்த தமிழர்களின் 40-50 வருட கால வாழ்க்கைப் பயணம் எப்படி இருந்து வந்துள்ளது? – இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் தமிழ் நிறுவன/ அமைப்பு ஆவணங்களிலேதான் (organisational archive) உள்ளன. கவலைக்குரிய நிலை என்னவென்றால் இத்தகைய ஆவணங்கள் பொது அணுகலுக்கு கிடைப்பதில்லை.

இன்றும் பல புலம்பெயர் அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளைக் கொண்டுள்ளவர்கள் புலம்பெயர் தமிழர்களின் முதல் தலைமுறையினர் ஆவர். அவர்கள் 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்கள் ஆவர். இவர்கள் இலங்கையில் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்ப்பாண நூலக எரிப்பு[i] மற்றும் அரச உதவியில் மெற்கொள்ளாப்பட்ட பிற அரிச்சிகரமான பண்பாட்டு இனப்படுகொலைகளை (cultural genocide) அனுபவித்தவர்கள்.
தமிழ் கவிஞரான மயில் வாகனார் புலவர் 1736 ஆம் ஆண்டு எழுதிய “யாழ்பாண வைபவ மாலை” இன் ஒரே மூல நகலை உள்ளடக்கிய 97 000 தனித்துவமான நூல்கள் மற்றும் ஆவணங்கள் சாம்பலாக்கப்பட்டன. இச் சந்தர்ப்பத்தில், இரண்டாம் உலகப் போரின் கீழ் ஜேர்மன் படையெடுப்பால் நோர்வேயிய ஆவணங்களில் சில பகுதிகள் பறிமுதல் செய்யப்பட்டதை குறிப்பிட விரும்புகிறேன்.
அடக்குமுறையின் வடுக்கள் தமிழரிடம் தொடர்கின்றன. இது ஆவணங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனியார் கைகளில் வைத்திருப்பதற்கான பல காரணங்களில் ஒன்று. தம்மிடம் எஞ்சியிருப்பதை இழக்க நேரிடும் என்ற அச்சமே. அதோடு எண்ணியமயமாக்கல் (digitalising) மற்றும் மூலப் பிரதியை பல பிரதிகளாக்கி வைத்திருப்பதும் இந்த வரலாற்று அதிர்ச்சி அனுபவத்தின் மற்றுமோர் பிரதிபலிப்பாகும்.

இருப்பினும், அந்த வரலாற்று அனுபவத்தை ஒரு தடையாக வைத்துருப்பதைத் தவிர்த்து ஒரு பாடமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது ஒரு நீண்டகால சமூக தேவையாக உள்ளது.
“ஈழம்” என்ற சொல்லை நாம் ஒரு எடுத்துக்காடாக எடுத்துக் கொள்ளலாம். “ஈழம்”[ii] என்பது இலங்கைத் தீவின் பூர்வீக பெயர். இன்றுமுதல் DsporA Tamil Archive இந்த அர்த்தத்தின் அடிப்படியிலே ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தும். ஈழத் தமிழர்கள் தங்களது முன்னோர்களின் வரலாற்றிற்கான அனைத்து ஆவணங்கள் மற்றும் தொல்பொருள் சான்றுகளை சேகரிக்க வேண்டும் என்ற ஓர் புதுப்பிக்கப்பட்ட சமீப தேடலைக் கொண்டுள்ளனர். அதனை அவர்கள் கல்வெட்டுகள், அச்சிடப்பட்ட நூல்கள், சங்க காலம் தொடக்கம் (கி.மு. நூற்றாண்டுகள்) பிற்காலம் வரையிலான தொல்பொருள் சான்றுகள் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கண்டறிந்து முன்வைக்கின்றனர். “ஈழம்” என்ற சொல்லை பல்வேறு வடிவங்களில் பதிவுகளாக செய்யப்பட்டதாலும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டதாலும், அவை தமிழர்களின் பூர்வீக உரிமை மற்றும் வரலாற்றிற்கான சான்றுகளாகின்றன. அதேபோல், தாயக வாழ் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழ் சந்ததியினரின் அறியப்படாத, எதிர்கால பயன்பாடுகளிற்கும் மற்றும் நோக்கத்திற்கும் சமகால பதிவுகள் ஆவப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு.

புலம்பெயர்ந்த தமிழரின் மூத்த தலைமுறையினர் தாயகத்தில் உருவாக்கப்பட்ட தாயக விடுதலைப் போராட்டம் சார்ந்த ஆவணங்கள் மட்டுமே பெறுமதிமிக்க ஆவணம் என்று கருதுகின்றனர் என்பதை மீண்டும் குறிப்பிடுவது முக்கியம் ஆகின்றது. ஆனால் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் உருவாக்கிய ஆவணங்களும் சமகால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பெறுபதிமிக்க ஆவணங்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அதில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் உருவாக்கிய தாயக விடுதலைப் போராட்டம் சார்ந்த ஆவணங்களும் பெறுபதியானவைகளே. அதில் அனைத்து போராட்ட வடிவங்களும் மற்றும் போராட்ட அமைப்புகளும் உள்ளடங்கும். எந்தவொரு தவறான புரிதலையும் தவிர்க்க நான் அடிக்கோடிட்டுக் கூற விரும்புகிறேன். கடந்த 30-40 ஆண்டுகால விடுதலைப் போராட்டமானது முதல் தலைமுறையினருக்கு ஒர் அரசியல். அது இரண்டாம் தலைமுறையினருக்கு பகுதி அரசியலாகவும் மற்றும் பகுதி வரலாறாகவும் உள்ளது. ஆனால் இங்கு மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறை தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் கடந்த 30-40 வருடகால தமிழர் விடுதலைப் போராட்டமானது ஓர் வரலாறாக உள்ளது!
சங்க கால வரலாற்றைப் போலவே அக்காலமும் ஈழத் தமிழ் இருப்பின் தொடர்ச்சியைக் கூறும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சான்றுகள்! ஒரு ஆவண நெறிமுறை (archive ethics) பார்வையில், ஆவணச் செயற்பாடு புறநிலை கொண்டு (objectivity), வரலாற்றுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

ஆவணகம் – சில ஆவணச் சொற்கள்:

Clause (klausul): இரகசியத்தன்மையின் கடமைக்கு உட்பட்ட தகவல்களை பொது அணுகலிலிருந்து தடுத்து வைத்தல்
Access (tilgang) – அணுகல்: ஒரு ஆவணத்தை அடையாளம் கண்டு, பல்வேறு பயன்பாட்டிற்காக ஒரு ஆவணப் பொருளைப் பெற்றுக் கொள்தல்.
Ownership (eierskap) – உரிமை: ஒரு ஆவணத்தின் உரிமையாளர் மற்றும் ஆவண உருவாக்குனர். அது ஒரு தனி நபர், ஒரு அமைப்பு அல்லது ஒரு திணைக்களமாக இருக்கலாம்.

ஆவணகத்தில் ஆவணப்படுத்த இரு ஒழுக்கு முறைவகள்:

நோர்வே ஆவணச் சட்டத்தின்படி, தனியார் ஆவணங்களை (private archive) ஓர் ஆவணகத்தில் இரண்டு வெவ்வேறு ஒழுக்கு முறைகளின் கீழ் ஆவணப்படுத்த முடியும்.

  1. ஒப்படைத்தல் (handing over/ avlevering)
  2. வைப்பு (depositing/ deponering)

இதன் முக்கிய வேறுபாடு ஆவணங்களின் உரிமையில் உள்ளது.
“ஒப்படைத்தல்” ஒழுங்கு முறையில், ஆவணங்களின் உரிமை ஆவணகத்திடம் முழுமையாக வழங்கப்படுகிறது. அதாவது ஆவணப் பொருட்களில் பாதுகாக்க வேண்டியுள்ள இரகசிய அல்லது தனிப்பட்ட விபரங்களை  (confidentiality and privacy policy/ taushetsplikt og personvern) கருத்தில் கொண்டு ஆவண அணுகலுக்கான மதிப்பீட்டு  அதிகாரம் ஆவணகத்திடம் கொடுக்கப்படும். இரகசிய அல்லது தனிப்பட்ட விபரங்கள் அடிப்படியில், ஆவணப் பொருட்கள் (archival materials) அல்லது முழு ஆவணமும் (archive) 60-100 ஆண்டுகள் (பொதுவாக 60 ஆண்டுகள்) இரகசியத்தன்மையின் கடமைக்கு உட்பட்டு, தகவல்களை பொது அணுகலிலிருந்து தடுத்து வைக்கலாம் (Clause/ klausul). இது நோர்வே ஆவணச் சட்டத்தின் அடிப்படையின் கீழ் தனிநபரின் இரகசிய அல்லது தனிப்பட்ட விபரங்களை  (confidentiality and privacy policy/ taushetsplikt og personvern) பாதுகாக்க செய்யப்படுகின்றது. ஆவணங்களில் உள்ள இரகசிய மற்றும் தனிப்பட்ட விவரங்கள் (privacy policy/ personvern) இருந்தால் மட்டுமே இந்த தடுப்பு செய்யப்படுகின்றது. இல்லையெனில் நோர்வே ஆவணச் சட்டம் அணுகல் / வெளிப்படைத்தன்மை (access/ transparency – innsyn)கொள்கையின் அடிப்பையில் செயல்படுகிறது. முடிந்தவரை அதிக அணுகல் / வெளிப்படைத்தன்மையை வழங்கும் சட்ட ஒழுங்கை ஆவணகங்கள் கொண்டுள்ளது (more access/ transparency – mer innsyn).

மறுபுறம், “வைப்பு” என்பது ஆவண உருவாக்குனரிடம் முழு உரிமையும் இருக்க, ஆவணங்கள் ஒரு ஆவணகத்தில் ஆவணப்படுத்தப்படும்.
உதாரணமாக, “DsporA Tamil Archive” இந்த இடுகைகளை ஒரு ஆவணகத்தில் வைப்பு செய்ய முடிவு செய்தால், இந்த பதிவுகள் எதிர்காலத்திற்காக ஒரு ஆவணகத்தில் ஆவணப்படுத்தப்படும். இடுகைகளை அணுக யாராவது விண்ணப்பிக்கும்போது, ​​அந்த ஆவணகம் என்னிடம் அந்த அணுகலுக்கான கோரிக்கையை அனுப்பும். பின்னர் நான் கோரிக்கையை பரிசீலித்து அணுகலை அனுமதிக்கலாம் அல்லது இடுகைகளுக்கான (ஆவணப் பொருட்கள்) பகுதி அணுகலை (partial access) அனுமதிக்கலாம். அல்லது அணுகல் கோரிக்கையை நிராகரிக்கலாம். இதைச் செய்வதன் மூலம் ஆவணப் பொருட்கள் எதிர்காலத்திற்காக ஆவணப்படுத்தப்படும் அதே நேரத்தில் ஆவண அணுகலை ஆவண உருவாக்குனர் (archive creator) கண்காணிக்கலாம். இதன் பொருள் என்னவென்றால், “DsporA Tamil Archive” ஆவணகத்தில் வைப்பு செய்யப்பட்ட ஆவணப் பொருட்களை திரும்பப் பெற முடியும். இது வைப்பு ஒழுங்கில் இருக்கும் ஓர் பிரதிகூலம் (disadvantage). ஆவணத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்று அந்த ஆவணத்தில் தொடர்புபட்ட சமூகம் விரும்பினாலும், ஆவணப்பொருள் எதிர்காலத்திற்காக ஆவணப்படுத்தும் முடிவு ஆவண உருவாக்குனரின் கைகளில்தான் தங்கியுள்ளது.

இவ்விரு ஒழுக்குகளில் ஒன்றின் அடிப்படியில் உங்கள் ஆவணத்தை ஒரு ஆவணகத்தில் கொடுக்கும்போழுது, ஆவண பெறுமதி உள்ள ஆவணங்களை மதிப்பிட்டு இனம்காண உங்களுக்கு உதவுவார்கள். ஆவண பெறுபதி அற்ற ஆவணங்களை அவர்கள் இனம் கண்டால், அவற்றினை குப்பையில் எறிவதை தவிர்த்து, உங்களுக்குத் திருப்பித் தருவார்கள்.
இரண்டாவதாக, தனியுரிமைக் கொள்கைகளின் (privacy policy) அடிப்படையில், நீங்கள் விரும்பும் அளவிற்கு ஆவணப் பொருட்களை அணுகலுக்கு வழங்கலாம். மேலும் அவற்றை “Digitalarkivet.no” (எண்ணிய (digital) வழி அணுகலுக்கான வலைத்தளம்) இல் கிடைக்கச் செய்யலாம். ஆவணகத்துடன் உங்கள் “ஒப்படைத்தல்” அல்லது “வைப்பு” ஒப்பந்தத்தில் இந்த வகையான விவரக் குறிப்புகள் அனைத்தும் செய்யலாம்.

ஒரு ஆவணகத்தில் ஆவணப் பொருட்களை ஆவணப்படுத்துவதில் உள்ள நன்மைகள்:
  • காகித ஆவணப் பொருட்கள் தண்ணீர், தீ மற்றும் வெப்பநிலை போன்ற இயற்கை அழிவு மற்றும் சிதைவிலிருந்து பாதுகாக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்படும். காலப்போக்கில் வெப்பநிலை மற்றும் காற்று நிலை ஆகியவைகூட ஒரு காகித ஆவணப் பொருளில் உள்ள எழுத்தையும் அதன் காகிதத்தையும் சிதைக்கும்.
  • தொழில்நுட்ப வளர்ச்சியடையும் பொழுது எண்ணியப் பொருட்கள் (digital materials) வாசித்து விளங்கிக் கொள்ளக்கூடிய தளங்களிற்கு மாற்றப்படும்.
  • சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் ஒரு இடுகையை வெளியிடுவது ஒரு பதிவை (record) உருவாக்குவதற்கான முதல் படியாகும். அந்த பதிவு உங்கள் அல்லது உங்கள் அமைப்பின் செயற்பாட்டை உலகிற்கு அறியப்படுத்தும் செயல் ஆகும். ஆனால் அது ஆவணப்படுத்தல் அல்ல! ஆவணப்படுத்தல் என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட தளத்தில் அல்லது இடத்தில் சமகால மற்றும் எதிர்கால சந்ததியினர் தமது தேவைக்கேற்ப தாம் தேடும் ஆவணத்தை எளிதாக இனம் கண்டு பாவனைக்கு உட்படுத்துதல் ஆகும். இணையத்தில் பதியும் இடுகைகள் என்பது கடலில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது போன்றதாகும்.
  • ஒரு வலைத்தளத்தில் ஒன்றை வெளியிடுவது ஒரு பதிவை உருவாக்குவதற்கான முதல் படியாகும். ஆனால் சமூக ஊடகங்களில் இடுகையிடுவது ஒரு பதிவேடு அல்ல. இது உங்கள் செயல்பாடுகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் முறைமை. வலைத்தளத்தில் உள்ள பதிவுகளையும் சமூக ஊடகங்களில் பகிரலாம். இந்தப் பகிர்வுகள் உங்கள் அல்லது உங்களது அமைப்பின் செயற்பாட்டை உலகிற்கு அறியப்படுத்தும் செயல் ஆகும். ஆனால் அது ஆவணப்படுத்திப் பாதுகாத்தல் அல்ல! வலைத்தளங்களை ஆவணப்படுத்திப் பாதுகாக்க முடியும். ஆனால் சமூக ஊடகங்களில் பதியப்பபடும் பதிவுகள் ஆவணப்படுத்திப் பாதுகாப்பது சவாலானவை. ஆவணப்படுத்தல் என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட தளத்தில் அல்லது இடத்தில் சமகால மற்றும் எதிர்கால சந்ததியினர் தமது தேவைக்கேற்ப தாம் தேடும் ஆவணத்தை எளிதாக இனம் கண்டு பாவனைக்கு உட்படுத்துதல் ஆகும். சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் பதியும் இடுகைகள் என்பது கடலில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது போன்றதாகும்.
ஆவணகத்தில் ஆவணப்படுத்தலாமா? இல்லையா?

உங்கள் ஆவணத்தை ஒரு ஆவணகத்தில் “ஒப்படைத்தல்” அல்லது “வைப்பு” ஒழுக்கில் வழங்குவதற்கான நம்பிக்கை ஒரு கால வளர்ச்சியின் அடிப்படியில் உருவாகும் ஓர் செயல் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் முதல் கட்டமாக, ஆவணப்படுத்தல் பற்றிய புரிதலை ஏற்படுத்த ஒரு ஆவணகத்தைச் சென்று பார்வையிட ஒர் வாய்ப்பளியுங்கள். அதன்மூலம் ஆவணகத்துடனான ஒர் உறவை உருவாக்குங்கள்.

நான் முன்பு குறிப்பிட்டபடி, இவ்வாறான நம்பிக்கையையும் ஆவணப் புரிதலையும் உருவாக்குவது ஓர் சமூக செயல்முறை (social process) ஆகும். ஆனால் குறைந்தபட்சம், “ஆவணம் என்றால் என்ன?” என்ற இந்த தொடரில் குறிப்பிட்டுள்ள அடிப்படை விவரங்களை கருத்தில் கொண்டு உங்கள் உள்ளூர் ஆவண சேகரிப்பு செயற்பாடுகளை (local archival collection activity) செய்யுமாறு ஓர் தாழ்மையான வேண்டுகோள். மேலும் முக்கியமாக உங்கள் உள்ளூர் ஆவண சேகரிப்பு செயற்பாடுகளை (local archival collection activity) அடுத்த தலைமுறை பெற்றுக்கொள்வதற்கான சில திறவுகோல்களை உருவாக்குமாறும் ஓர் தாழ்மையான வேண்டுகோள். இதனால் எதிர்காலத்தில் அவர்கள் தமிழர்களின் வரலாற்றைக் கூறும் ஆவணங்களை தொடர்ந்து ஆவணப்படுத்த முடியும்.

தமிழ் பண்பாடு, வரலாறு, பாரம்பரியத்தின் (cultural and historical heritage) ஒரு சிறிய பகுதியை உங்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்கள் என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். அதனை பொது அணுகலுக்கு (public access) வழியமையுங்கள்.


மேற்கோள்கள்:

[i] Journeyman Pictures (Producer). (2009, 19.07.2020). The Library Which Sparked a Civil War in Sri Lanka. Hentet fra https://youtu.be/cT6z8irTXHg

Nihari Film Circle and Productions (Producer). (2008, 19.07.2020). Burning Memories/எரியும் நினைவுகள். Hentet fra https://youtu.be/8kY0_Q0XYUM

[ii] IBC Tamil News (Producer). (2020, 19.07.2020). ஈழம் இலங்கையின் பூர்வீக பெயர்? | Eelam is Ancient Name Of Sri Lanka | Eelam history. Hentet fra https://youtu.be/hQjgraa5OUE

TamilNet. (2008). Eezham Thamizh and Tamil Eelam: Understanding the terminologies of identity. Hentet fra https://www.tamilnet.com/art.html?catid=99&artid=27012

Veluppillai, Alvappillai. (1997). Language.  Hentet fra https://www.tamilnet.com/img/publish/2015/11/Tamil_Language_and_Eelam_Tamils_by_Prof_A_Veluppillai_July_1997.PDF

படத்திற்கான மேற்கோள்:

Sri Kantha, Sachi. (2013). Book Burning in 1933 and 1981: Nazi and Sinhalese goons: style comparisons. Hentet fra https://sangam.org/book-burning-1933-1981/

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

2 thoughts on “′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 6

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s