ஆங்கில அறிக்கை: அபிராமி சந்திரகுமார்
தமிழீழ விடுதலைப் போரிலும் ஏனைய அழிவுகளிலும் உயிர் இழந்த அனைவருக்காகவும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் கொல்லப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி மெய்நிகர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இரு நாள் நிகழ்விற்கு தமிழ் இளையோர் அமைப்பு (TYO) நோர்வே கிளையினர் Zoom தொழில்நுட்ப உதவியை வழங்கினார்கள். TYO நோர்வே உறுப்பினரான சாம்பவி வேதாநந்தன் 12. யூன் 2021 நடைபெற்ற நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு: வரவேற்புரை
புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பின் சார்பில் பகீரதி குமரேந்திரன் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று, இந்த நிகழ்வை சாத்தியமாக்க வளம் சேர்த்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பல சமூக செயல்பாட்டாளர்களின் முயற்சியால், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களின் வரலாறு மற்றும் பண்பாடு பேணிப் பாதுகாக்கப்படுகின்றது.
நோர்வே வாழ் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றைத் தேடும் பயணத்தில் 2020ம் ஆண்டு DsporA Tamil Archive (புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு) உருவாக்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்களுக்கு ஆவணக்காப்பின் விழிப்புணர்வையும் ஆவணங்களின் அணுக்கத்தின் முக்கியத்துவத்தையும் பரப்புவதே இதன் முதன்மை நோக்கம் ஆகும். தமிழ் சமூகத்திற்கு ஆவணக்காப்பின் மூலம் நமது வரலாற்றையும் அடையாளத்தையும் பேணிப் பாதுகாப்பது புதிய விடயம் அல்ல. என்றாலும், படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, போர், புலம்பெயர்வு, இனவழிப்பு ஆகிய காரணிகள் இந்த நடைமுறையை புதுப்பித்து வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை முன்வைத்துள்ளன.
நாம் ஈழத்தில் வாழும் ஆவணக்காப்பகப்படுத்தல் செயல்பாட்டாளர்களையும் எம்முடன் இன்று வளவாளர்களாக இணைத்துக் கொள்ள முயற்சி எடுத்திருந்தோம். ஆனால் சமூக மற்றும் அரசியல் நிலைமை காரணமாக, இது சாத்தியப்படவில்லை. தாயத்தில் அவர்களுடைய ஆவணச் செயல்பாடு தமிழரின் இருப்பிற்கு இன்றியமையாதது.
இச்சந்தர்ப்பத்தில் யாழ் நூலக எரிப்பின் 40வது ஆண்டு நினைவு கூறலுடன், அனைத்து தமிழ் அமைப்புகளிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்க முயல்கின்றோம். உங்கள் நிறுவனத்தில் ஒரு பதிவேட்டு மேலாளர் பொறுப்பை நியமித்து தமிழரின் ஆவணப்படுத்தல் மற்றும் காப்பகப்படுத்தல் பாரம்பரியத்தைப் புதுப்பிக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.
நளாயினி இந்திரன்: ஆவாணக்காப்பகத்தின் பங்கு
ஆவணக்காப்பு குறித்த தகவல்கள் பொதுவாக அறியப்பட்ட ஒரு விடயம் அல்ல, எனவே பெரும்பாலான மக்கள் இதைப் பற்றிய முழுமையான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், காப்பகப்படுத்தும் நடைமுறை நாட்டிற்கு நாடு மாறுபடும்.
இந்த தலைப்பு தொடர்பான பொருளை அறிந்து கொள்ள முக்கியமான சொற்கள்: பதிவுகள் (records), ஆவணங்கள் (documents), ஆவணக்காப்பகப்படுத்தல் (archive), ஆவணப்படுத்தல் (documentation).
இந்த விடயத்தைப் பற்றி பேச நாம் பயன்படுத்தும் சொற்கள் காலப்போக்கில் உருவாகி மாற்றம் பெற்று வந்துள்ளன. இதில் ஆவணப்படுத்தல் மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் எனும் சொற்களிற்கு இடையில் உள்ள வேறுபாட்டை இனம் காண்பது முக்கியம்.
ஆவணப்படுத்தல் – documentation: பண்பாடு, வரலாறு அல்லது பிற செயல்பாடுகளின் தகவல் ஒரு ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டு ஆவணமாக்கப்படுதல் (process documentation to create a product documentation).
ஆவணக்காப்பகப்படுத்தல் – archive: ஒரு ஆவணம் (product documentation) நீண்ட காலப் பேணிப் பாதுகாப்பிற்காக மதிப்பிடப்பட்டு ஒரு காப்பகத்திற்கு (நிறுவனம்) மாற்றப்படுதல்.
இந்த செயல்பாட்டில் ஒரு பதிவு எவ்வாறு, ஏன் ஆவணக்காப்பகப்படுத்தப்பட்டுள்ளது என்ற அதன் வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றிய ஒரு புரிதலும் இருப்பது முக்கியம்.
காப்பகப்படுத்தப்பட்ட ஆதார மூலங்கள் பண்பாடுகளின் கடந்த காலத்தையும் பரிணாமத்தையும் புரிந்து கொள்ள உதவும். அவை எதிர்கால அரசியல் அல்லது சமூக தீர்மானங்களுக்கும் உதவக்கூடும்.
அடக்குமுறையை எதிர்கொண்ட புலம்பெயர் தமிழர்களுக்கு, இனப் பிரச்சனை மற்றும் அவர்களின் இன அடையாளம், பண்பாடு பற்றிய ஆதாரங்களை அணுக வேண்டிய தேவை இருக்கும்.
இலங்கையில், 1600ம் நூற்றாட்டுகளைச் சேர்ந்த காப்பக ஆவணகள் (archival documents) இன்னும் அப்படியே உள்ளன. காலனித்துவ ஆட்சி காரணமாக முந்தைய ஆவணங்கள் அழிக்கப்பட்டன. கிடைக்கக்கூடிய காப்பகப்படுத்தப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி, தீர்மானங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டன, சிக்கல்களும் முறண்பாடுகளும் எவ்வாறு ஆரம்பித்து தீர்வு கண்டன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். சிக்கல்கள் மற்றும் முறண்பாடுகள் காரணமாக தமிழ் பண்பாடும் மக்கள் தொகையும் எவ்வாறு மாற்றம் பெற்றது என்பது குறித்த ஆவணங்களைப் பாதுகாப்பது முக்கியம். இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, எதிர்காலத்தில் நமது சமூகம் இருக்கும் நிலையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
என். செல்வராஜா: நூலகத்தின் பங்கு
நமது தமிழ் சமூகத்தில் நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை வேறுபடுத்தும் தன்மை இல்லாமை காணக்கூடியவாறு உள்ளது.
நூலகங்கள் வெளியிடப்பட்ட படைப்புகள் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்கின்றன. இதனால் அவை தனிப்பட்ட முறையில் வாசித்து தகவல் அறிந்து கொள்ள முடியும்.
அருங்காட்சியகங்கள் வரலாற்றுக் கலைப்பொருட்கள் மற்றும் ஆதாரங்கள் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனால் சமூகம் அந்தக் கலைப்பொருட்கள் உருவாகிய காலம் குறித்து புரிந்துகொள்ள பங்களிக்கின்றன.
ஆவணக்காப்பகங்கள் நீண்ட காலப் பேணிப் பாதுகாப்பிற்காக அனைத்து வகையான ஊடகங்களிலும் உள்ள ஆவணங்களைப் பேணுகின்றன. ஆனால், இலங்கையில் உள்ள ஆவணக்காப்பகங்களில் உள்ள ஆவணங்கள் எளிதில் பொது அணுக்கத்திற்கு கிடைப்பதில்லை. ஆனால் அசல் மூலங்களையும் ஆவணங்களையும் சேமித்து தொழில்முறை ஆராய்ச்சி மற்றும் பொதுப் பேணிப் பாதுகாப்பிற்கான ஒரு இடமாக உள்ளது.
இந்த நிறுவனங்களை வேறுபடுத்துவதில் உள்ள சிரமத்தின் காரணங்கள் பல. ஒன்று இலங்கையில் நூலகங்களைப் பார்க்கும்போது, எங்களிடம் மாநில நூலகம், பொது நூலகம், சிறப்பு நூலகம், பள்ளிக்கூட நூலகம், பல்கலைக்கழக நூலகம் மற்றும் இன்னும் பல நூலகங்கள் உள்ளன. நூலகம் என்ற சொல் மிகவும் விரிவானதாக உணரப்படுகின்றது. எனவே அது காப்பகப்படுத்துவதற்கான ஒரு களஞ்சியமாவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு நூலகத்தில் நூல்கள் மட்டுமல்ல, காணொளிகள், ஒலிப் படிப்புகள் மற்றும் படங்கள் உள்ளன. எனவே நூலகங்களில் பல்வேறு ஊடகங்களின் சேகரிப்பு ஆவணக்காப்பகத்திற்கு (archive) சமம் என்று இயல்பாக கருதப்படுகிறது .
1800ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனித்துவவாதிகள் மேற்கொண்ட முயற்சியே நூலகத்தின் ஆரம்ப சான்றாகும். காலனித்துவ காலத்தில்தான் இதுபோன்ற அரசு நிறுவனங்கள் நாட்டில் நிறுவப்பட்டன.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், இனப் பிரச்சனை தொடங்கியது. இந்த நிலை தமிழர்களுடைய ஆவணங்களைக் காப்பகப்படுத்துவதை கெள்விக்குறியாக்கியது.
எவ்வாறாயினும், இலங்கையில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு நூல்களின் ஐந்து பிரதிகள் ஆவணக்காப்பகத் துறைக்கு (Department of Archiving) அனுப்பப்பட வேண்டும் எனும் சட்டம், வைப்புச் சட்டம் (The Legal Deposit Law), உள்ளது. இந்த ஐந்து பிரதிகள் பின்னர் பொது நூலகங்களிடையே பாவனைக்கு கொடுக்கப்படும். இந்தச் சட்டத்தின் காரணமாக, இலங்கையில் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகங்கள் கைகோர்த்துச் செயல்படுகின்றன. கவலைக்குரிய விடயமாக, வரிவிதிப்பைத் (taxation) தவிர்ப்பதற்காக வெளியீட்டாளர்கள் இந்தச் சட்டத்தைப் பின்பற்றுவதில்லை. எனவே இதனால் முக்கியமான பேணிப் பாதுகாத்தல் (preservation) தடைப்படுகின்றது. அதோடு ஆவணக்காப்பகத் துறையில் (Department of Archiving) தமிழர்களும் அதிகாரிகளாக பதவிகளில் இல்லை.
தமிழ் பண்பாடு மற்றும் வரலாற்று அழிவிற்கு நாம் முழு குற்றச்சாட்டையும் அரசாங்கத்தின் மீது போடுகின்றோம். ஆனால் நாமும் ஓரளவு பழியை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மில் மிகச் சிலரே தமிழ் நூல்கள் காப்பகப்படுத்தப்படுகிறதா என்பதில் அக்கறைப்படுகிறோம்.
உலகளாவிய ஈழத் தமிழர் வெளியீடுகளின் பட்டியலான எனது நூலை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். இது நான் எடுத்துக்கொண்ட ஒரு வேலை. ஆனால் உண்மையில் இது இலங்கையின் தேசிய நூலகத்தின் கடமையாகும். அவர்களின் வெளியீடுகளின் பட்டியலில், அரசு வெளியிட்ட தமிழ் நூல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. காப்பகப்படுத்தும் போது எந்த வடிகட்டலும் இருக்கக்கூடாது, எல்லாவற்றையும் சேர்க்க வேண்டும். எதிர்காலத்திற்கு எது எமக்கு தேவைப்படும் என்று எங்களுக்கு இன்று தெரியாது. நம்மிடம் உள்ள அனைத்து பட்டியல்களையும் ஆவணங்களையும் பட்டியலிட்டு ஒழுங்கமைப்பதே இப்போது இருக்கும் முக்கியத் தேவை ஆகும். இதைச் செய்ய சர்வதேச அளவில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அது எங்களுடைய அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் சேகரிப்பதன் மூலம் அல்ல. மாறாக அனைத்து ஆவணங்களின் இருப்பிடத்தை எண்ணிம பட்டியல் மூலம் செகரிப்பது ஆகும்.
கோ. சிறிகாந்தன்: அருங்காட்சியகத்தின் பங்கு
எனது கல்விப் பின்னணி தொழில்நுட்பம் (technology) ஆகும், அருங்காட்சியம் அல்ல. ஆனால் நான் இலண்டனில் ஒரு தமிழ் அருங்காட்சியகத்தை நிறுவுவதில் பணியாற்றி வருகிறேன். இப்போது, நாங்கள் இதை ஒரு மெய்நிகர் காட்சிக்கூடமாக உருவாக்குகிறோம். ஆனால் ஒரு இயற்பியல் (phusical) அருங்காட்சியகத்தை உருவாக்குவதே இதன் இறுதி நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ICOM (International Council of Museums) இன் வரையறையின் அடிப்படையில் அருங்காட்சியகங்களின் பங்கு என்னவென்று புரிந்து கொள்ளலாம். அவை திறனாய்வு உரையாடல்களுக்கான (critical conversations) இடங்கள், சவால்களை ஏற்றுக் கொள்தல் (acknowledgment of challenges), கலைப்பொருட்கள் மற்றும் நினைவுகளைப் பாதுகாத்தல் (safeguarding of artefacts and memories). இவை அனைவருக்கும் பொதுவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும், இலாபத்திற்காக இயங்கக்கூடாது (open and transparent to all and not run for profit). அருங்காட்சியகத்திற்கான உள்ளடக்க சேகரிப்பு சமூகங்களுடன் கூடிய ஒரு கூட்டு மற்றும் உடன்பாட்டில் அடிப்படையில் இருக்க வேண்டும் (The collection of content for the museum should be in partnership and agreement with communities). அருங்காட்சியகங்கள் பூமியின் குடிமக்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் (Museums should have a purpose of contributing to the wellbeing of the inhabitants of earth and the planet itself).
ஆரம்பகால தமிழர்கள் மனித மூளையை ஒரு காப்பகமாக பயன்படுத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் முக்கியமான நிகழ்வுகள், பண்பாட்டு நிகழ்வுகள் அழியாது இருக்க, பாடல்கள் மற்றும் பண்கள் மூலம் கடத்தப்பட்டன. ஏனெனில் பாடல்கள் அதனை நினைவில் கொள்ள எளிதான வழிமுறையாக இருக்கும் என்பதனால். இவை தலைமுறை தலைமுறையாக நினைவில் தாங்கி கடத்தப்பட்டன.
பாரம்பரிய கலை வடிவங்கள், பரதநாட்டியம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களும் கதைகளை கடத்திச் செல்வதற்கான ஒரு ஊடகமாக இருந்திருக்கும் என்பதையும் என்னால் ஊகிக்க முடிகிறது. மேலும், சங்கங்களில் நடாத்தப்படும் கலந்துரையாடல்கள் பொது மக்களின் நினைவகத்தில் ஒரு தகவலை புதுப்பித்தவண்ணம் வைத்திருக்க ஒரு வழிமுறையாகப் பயன்படுத்திருக்கலாம்.
இந்த வடிவங்களில் உள்ள தகவல்கள் மிகவும் எளிமையானதாகவும் சுருக்கமாகவும் இருந்ததால், நினைவில் கொள்வது எளிதாக இருந்தது. அதனால் அதை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் அதிக வாய்ப்புப் பெற்றிருந்தது. இருப்பினும், 1500ம் நூற்றாண்டில், சமஸ்கிருத ஆட்சிக் காலப்பகுதியில், தமிழ் ஆவணங்கள் அழிக்கப்பட்டன. கவலைக்குரிய விடயமாக, இந்த நிலை எமது பண்பாட்டு வரலாற்றைப் புரிந்துகொள்வதில் கடினத்தை உருவாக்கியது.
ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்கள் ஒன்றோடொன்று தொடர்புபட்டவை. அவ்வாறே இங்கிலாந்தைப் பொருத்தளவில் உள்ளது. ஒருவர் விரும்பினால், ஒரு நூலகத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் காப்பகப்படுத்தப்பட்ட ஆவணங்களுக்கான அணுக்கத்தைப் பெறலாம். அதேபோல், அருங்காட்சியகங்களிலும் ஆவணக்காப்பபு உள்ளது. ஆனால் அதில் பொதுமக்கள் எளிதில் அணுக முடியாத பாகங்களும் உள்ளது. இந்தக் களஞ்சியங்களின் வேறுபாடு என்னவென்றால், ஒருவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்குத் தேவையான ஆதார மூலங்களைப் பயன்படுத்தக்கூடிய இடமாக நூலகங்கள் உள்ளன. அதே நேரத்தில் அருங்கட்சியகத்தில், அதே கருத்துகள் எளிமைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன.
இலண்டனில் தமிழர்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் முழுவதையும் வழங்கும் ஒரு இடத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். இது அனைத்து மக்களும் அணுகக்கூடியதாக மெய்நிகர் வடிவில் இருக்கும். நாம் தகவல்களை ஏழு தளங்களில் அமைக்க விரும்புகிறொம். அதன் மூலம் ஒவ்வொரு தளத்திலும் ஒரு விடயத்தை விரிவாகக் காட்சிப்படுத்தலாம் என்று நம்புகிறோம்.
நிதர்சன்: அறிவு மற்றும் உரிமைகளுக்கான தமிழ் ஆவணங்களின் அணுக்கம்
சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர் ஆகிய எனது முன்னோக்கின் (perspective) அடிப்படையில் இந்த உரை இருக்கும். மே 2009ம் ஆண்டிற்கு பின்னர் உருவான அரசியல் வெற்றிடத்திற்குப் பின்னர் நிறுவப்பட்ட Phoenix The Next Generation (Phoenix TNG) என்ற அரசியல் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றுகிறேன்.
ஆரம்பத்திலிருந்தே, எதிர்காலத்திற்காக எம்மைத் தயார்படுத்த கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்கு இருந்தது. நாங்கள் ஏன் போரிடத் தொடங்கினோம், ஏன் போராட்டத்தைத் தொடர வேண்டியது அவசியம் போன்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேட விரும்பினோம்.
இன்றைய சூழலில் ஆயுதப் போராட்டம் இல்லை. ஆனால் நம் வழியில் வீசப்படும் போர்களை வெல்ல அதே அறிவைப் பயன்படுத்த வேண்டும். முந்தைய தலைமுறையினர் எவ்வாறு உத்திகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டார்கள் என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், நாம் இன்னும் தயாராக இருக்க முடியும். இது நம் முன்னோர்களுடனான நமது பிணைப்பை பலப்படுத்துகிறது மற்றும் நம்மை ஊக்குவிக்கிறது.
கதைகள் (narratives) எமது அனுபவத்திற்கு வளம் சேர்க்கின்றன. அவை ஒரே உலகில் வாழும் மக்களின் வெவ்வேறு அனுபவங்களை காண்பிக்கின்றன. ஒரு இடத்தில் வாழ்ந்த ஒருவர் நேரடி அனுபவம் மூலம் ஒரு நிகழ்வை அறிந்து கொள்வது அதி மதிப்புமிக்க கற்றல் வகை ஆகும். போராட்டச் சூழலை அனுபவித்த மூல நபர் ஆதாரங்களைப் (first-person sources) பயன்படுத்தியதன் மூலம், போராட்டத்தின் வீரியத்தை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்து, உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. போராட்டத்தில் என்ன நிகழ்ந்தன என்பதற்கான ஒரு சான்றாக இந்த ஆதாரங்கள் அமைந்தன. அதோடு அட்டூழியங்களை மறுதளிப்பவர்களுக்கு எதிராக ஒரு வலுவான அரணாகவும் அமைந்தது.
இன்று ஈழப் போரைச் சூழ்ந்திருக்கும் கதைகளுக்கு (narratives) இடையேயான போர் நடைபெற்று வருகிறது. பலர் உண்மை என்று கருதப்படுவதைத் திரிவு படுத்த முயல்கிறார்கள். கடந்த காலத்து மூன்று முக்கிய மூல எழுத்துரு அறிக்கைகள் எம்மிடம் உள்ளன. அவை தமிழர் தாயக அபகரிப்பை நிறுத்துமாறு வலியுறுத்துகின்றன. தமிழர்களின் அடக்குமுறை ஒரு அரசியல் பிரமுகர் அல்லது கட்சி காரணமாக அல்ல, மாறாக ஒரு திட்டமிட்ட சிக்கல் என்பதை இந்த அறிக்கைகள் நமக்குக் காட்டுகின்றன.
2019ம் ஆண்டு “structures of Tamil Eelam: A Handbook” எனும் நூலை நாம் வெளியிட்டோம். இதற்கு முன்னர், இதே தகவல்களை சமூக ஊடகங்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அவை அகற்றப்பட்டன. இந்த நூல் போராட்டத்தின் கொடூரங்களை மட்டுமல்ல, இனப்படுகொலைக்கு முன்பே தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட அடக்குமுறையையும் காட்டுகிறது. தமிழர்கள் தம்மை தாமே ஆண்ட தமிழீழ நடைமுறை ஆரசை இந்த நூல் சித்தரிக்கின்றது. இது முள்ளிவாய்க்கால் 2009 இற்குப் பின் இருக்கும் நிலைமாறுகால நீதிக்கு (transitional justice) ஒரு எதிர் கதையை (counter-narrative) உருவாக்க எங்களுக்கு உதவியது. அப்போது ஏற்கனவே வளர்ந்து வரும் எமக்கான சொந்த கட்டமைப்பு இருக்கும் போது, ஏன் நாம் அடக்குமுறை கட்டமைப்பைக் கொண்ட இலங்கையிடம் (oppressive Sri Lankan system) நீதி கேட்க வேண்டும் என்ற கேள்வியை எமக்கு நாமே கேட்டுக்கொண்டோம். 2020ம் ஆண்டு “Rise of the Tigers” எனும் நூலை வெளியிட்டோம். இது விடுதலைப் புலிகளின் வரலாற்றை விவரித்தது. இது அவர்களின் உருவாக்கம், உந்துதல்கள், அரசியல் மற்றும் சவால்களைப் பற்றி பேசுகிறது.
இந்த நூல் செயல்திட்டத்தில் நாம் சில சவால்களை எதிர்கொண்டோம். ஒன்று, தமிழ் ஆதார மூலங்கள் எந்த வகையிலும் முறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. பல ஆதாரங்கள் போரில் அழிக்கப்பட்டுள்ளன, அகதிகளுடன் உலகம் முழுவதும் பரவியுள்ளன அல்லது தனிநபர்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நாங்கள் பெற்ற 90% க்கும் மேற்பட்ட தகவல்கள் இணையத்தில் பொது மூலங்களிலிருந்து பெறப்பட்டவை. மேலும் 10% மட்டுமே தனிநபர்களிடம் பெற்ற மூலங்களாக இருந்தன.
இதனால் ஆதார மூலங்களை பொது அணுக்கத்திற்கு விடுவதற்கும் முறைப்படுத்துவதற்கும் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்த உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எண்ணிமமயமாக்கல் என்பது ஒரு முன்னோக்கிய செயல்பாடாக இருக்கும் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அதை முற்றிலுமாக அழிப்பது கடினம், பகிர்ந்து கொள்வது எளிது, பொதுச் சொத்தாக மாற்றம் பெறும்.
ஆதார மூலங்களை பேணிப் பாதுகாப்பதற்காக காப்பகப்படுத்துவதில் மட்டுமல்லாமல், அவை ஆராய்ச்சிகளிற்கும் உட்படுத்த வேண்டும் என்று நான் எங்கள் சமூகத்தை கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி நேரம்:
நளாயினியிடம் பகீரதி: நிர்வாகப் பதிவுகளால் எமது சமூகத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி கூற முடியுமா?
இலங்கையில் உள்ளூர் நிறுவனங்களிடம் புள்ளிவிவரங்கள் தொடர்பான எல்லாவற்றையும் பற்றிய பதிவுகள் உள்ளன. ஆனால் சிலர் மட்டுமே இதை அணுகி பயன்பெற நினைக்கின்றனர். உதாரணமாக, வவுனியாவில் கச்சேரிக்குச் (பதிவெடு அறை – records room) சென்றேன். அது ஒரு பயங்கரமான நிலையில் இருப்பதைக் கண்டேன். பிற ஆதாரங்களைத் தேட முன் இந்த ஏராளமான பதிவுகளை எதிர்காலத்திற்காக காப்பகப்படுத்த வேண்டியது அவசியம்.
நளாயினியிடம் பகீரதி: தமிழ் சமூகத்தில் நூல்கள் முதன்மை ஆவணங்களாக மதிக்கப்படுகின்றன. ஆனால் பிற ஆவண வடிவங்கள் பற்றி கூற முடியுமா?
உதாரணமாக ஒரு நூல் உருவாக்கும் செயல்திட்டத்தில் அதனை உருவாக்கும் போது செய்யப்பட்ட திட்டமிடல் பதிவுகள் இருக்கும். இந்தப் பதிவுகள் வெளியிடப்பட்ட படைப்பின் பின்புல உந்துதல்கள், ஆசிரியரின் முன்னோக்கு ஆகியவற்றை புரிந்து கொள்ளவதற்கான முக்கிய பதிவுகள் ஆகும். இந்தப் பதிவுகள் மூலம் எந்த விடயங்கள் குறித்து எந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்ள முடியும்.
பதிவுகள், வரைபடங்கள், ஒலிப் பதிவுகள், திரைப்படங்கள் போன்ற பிற வகையான ஆதார மூலங்களுக்கும் காப்பகங்கள் உள்ளன. ஏனெனில் இவையும் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் ஆகும்.
என். செல்வராஜா:
நிர்வாகப் பதிவுகளின் முக்கியத்துவம் பற்றி நான் மேலதிகமாக குறிப்பிட விரும்புகிறேன். இங்கு குறிப்பிட்டபடி நிர்வாகப் பதிவு மேலாளர் பதவியில் நபர்கள் வர வேண்டும். இப்பதவி இலங்கையில் எங்கும் காணப்படாத ஒரு நிலையாக உள்ளது. நான் பார்த்த அளவில், தனிப்பட்ட வீடுகளில் காப்பகப்படுத்தும் முயற்சி எடுக்கப்படுகின்றது. தேசிய காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் காண முடியாத ஆதாரங்கள் தனிப்பட்ட வீடுகளில் மோசமான நிலையில் சேமிக்கப்படுகின்றன. இவை துறைசார் நிபுணர்களால் கவனிக்கப்படாமல் போவதால், அவை இழந்துவிட்டதாக அல்லது சேதமடைந்ததாகக் கருதப்படுகின்றன.
காப்பகப்படுத்தல் குறைந்தபட்சம் பல்வேறு ஆதார மூலங்கள் எங்கு இருக்கின்றன என்ற தகவலைத் தரும்.
இந்த ஆதாரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும், அவை காப்பகத்தில் இருப்பதைப் போல பயனுள்ளதாக இருக்காது. இணையவழி மூலங்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவது கடினம். மேலும் பரந்த உலகில் பயணிப்பது போல பரந்த இணையத்தில் பயணிப்பதும் கடினம். எண்ணிம மூலங்களுடனான மற்றொரு சிக்கல் இணையத்திலிருந்து நீக்கப்படும் ஆபாயம் ஆகும். எனவே, நான் கண்டதின் அடிப்படையில், ஆதார மூலங்களை நூல் வடிவில் வெளியிடுவது பேணிப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக நான் கருத்துகிறேன்.
ஆயுதப் போராட்டக் காலத்தில், 200 நூல்கள் வெளியிடப்பட்டிருந்தபோதிலும், காப்பகப்படுத்தலில் கவனம் செலுத்தப்படவில்லை. மற்றொரு சிக்கல் என்னவென்றால், பல வெளியீடுகள் 25 பக்கங்களுக்கும் குறைவானவையாக இருக்கும். எனவே அவை நூல்கள் என்று வகைப்படுத்தாமல், துண்டுப்பிரசுரங்களாக (pamphlets) வகைப்படுத்தப்படுகின்றன. தமிழர்களைப் பற்றிய பல முக்கியமான வெளியீடுகள் இந்த வடிவத்தில் உள்ளன. அவை இன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் மட்டுமே காணப்படுகின்றன.
இந்த எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக, காப்பகப்படுத்தல் கறுப்பு, வெள்ளையாக மட்டும் பார்த்துவிட முடியாது. தீங்கு விளைவிக்கும் விதிமுறைகள் குறித்தும் நாம் அறியாமல் உள்ளோம். உதாரணமாக, இலங்கையில் உள்ள ஒரு சட்டவிதிமுறை. ஒரு நூலகத்தில் உள்ள நூல்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பாவனையற்று இருந்தால் அதனை காப்பகங்களுக்கு அனுப்பாமல் அழிக்கப்படுகின்றன. எதுவும் வடிகட்டுவதிலோ அல்லது நிராகரிக்கப்படுவதிலோ நான் விரும்புவதில்லை.
பத்மநாபன் ஐயர், நூலக நிறுவனத்தில் தலைவர் (chairperson):
நாங்கள் பெற்றுக் கொள்ளும் எந்தவொரு ஆதார மூலங்களையும் நாங்கள் நிராகரிப்பதில்லை. என். செல்வராஜா கூறியது போல, எதையும் வடிகட்டவோ அல்லது புறக்கணிப்பதோ இல்லை. மேலும், இலங்கைக்கு வெளியே இருக்கும் தமிழரின் கதைகளை ஆவணப்படுத்துவதும் முக்கியம். உதாரணமாக, இங்கே இலண்டனில் உள்ள தமிழ் வணிகங்கள் மற்றும் தமிழ் கலை ஆசிரியர்களின் பட்டியல்கள் (catalogue) உள்ளன. நான் அதை ஒரு தொலைபேசி பட்டியல் நூல் என்று எளிமைப்படுத்திப் பார்க்கவில்லை. மாறாக எதிர்காலத்தில் ஒரு முக்கியமான ஆதார மூலமாக இருக்கம் என்பதே எனது பார்வை. எனவே எதுவும் நிராகரிக்கப்படுவதில்லை.
நளாயினி:
வெளியிடப்பட்ட நூல்களுக்கு மேலதிகமாக, எங்கள் காப்பக முயற்சியில் வெளியிடப்படாத பதிவுகள் மற்றும் முதன்மை ஆதார மூலங்களின் தேடலும் இருக்க வேண்டும்.
புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு: நன்றியுரை
நீங்கள் தாயகத்தில் எதிர்கொண்ட பின்னடைவுகள் பற்றிய தகவல்களும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் பற்றிய ஆதார மூலங்கள் குறித்து நீங்கள் கற்றுக்கொண்டவற்றை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. வெளிநாடுகளில் நிலைநிறுத்திக் கொண்ட எமக்கு, தாயகத்தில் கண்ட அதே சிக்கல்களை இங்கு எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்காது. இங்கு உள்ள புறச் சூழலை பயன்படுத்தி தமிழ் சமூகத்தில் காப்பகப்படுத்தல் நடைமுறைகளைப் புதுப்பிக்கலாம் என்று நம்புகிறேன்.
மீண்டும் அனைத்து தமிழ் அமைப்புகளிடமும் உங்கள் நிறுவனத்தில் ஒரு பதிவேட்டு மேலாளர் பொறுப்பை நியமிக்குமாறு வலியுறுத்தி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்று கலந்து கொண்ட வளவாளர்களுக்கும், தமிழ் இளையோர் அமைப்பு நோர்வே கிளையினருக்கும், இன்நிகழ்விற்கு வளம் சேர்த்தவர்களுக்கும், எம்முடன் இணைந்து பல நல்ல கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்பிய அனைவருக்கும் நன்றி கூறி, நாளைய நிகழ்விலும் இணைந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்றைய நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

புதுப்பிக்கப்பட்டது│Updated: