2016ம் ஆண்டு உமாபாலன் சின்னத்துரை எழுதிய “நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்” (Tamilenes liv og historie i Norge 1956-2016) எனும் நூல் தமிழிலும் நோர்வேயிய மொழியிலும் வெளியானது. இந்த நூல் தமிழில் 688 பக்கங்களும், நோர்வேயிய மொழியில் 184 பக்கங்களும் கொண்டுள்ளது. நூலின் இரு பதிப்புகளிலும் உள்ள உள்ளடக்கம் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. வரலாறும் பண்பாடும் (historie og kultur), பல்துறை முன்னோடிகள் (Allsidige pionerer) மற்றும் தமிழ் சார்ந்த முயற்சிகள் (Tamilbaserte initiativer). இதில் தமிழருடைய மொழி, கலை, பண்பாடு பற்றிய தகவல் பகுதியுடன், நோர்வேயில் கால் பதித்த முதல் ஈழத்தமிழரின் வரலாறும், நோர்வே வாழ் தமிழரின் 60 ஆண்டு கால (1956-2016) வரலாற்றில் பங்கேற்ற தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன.
குறுகிய காலத்தில், நூல் ஆசிரியரின் ஒப்புதலுடன் இன்நூலின் சில பகுதிகள் Lokalhistoriewiki.no இல் இடுகை செய்யப்பட்டது. அவ்வாறு இடுகை செய்யப்பட்டக் கட்டுரைகள் முக்கியமாக நோர்வே வாழ் நபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்ந்தவையாக உள்ளன. என்றாலும் நூலில் வெளிவராமல் சுயாதீனமாக வேறு சில கட்டுரைகளும் சிலரால் இடுகை செய்யப்பட்டுள்ளது.

Lokalhistoriewiki.no இல் உள்ள தமிழ் பக்கத்தைப் பார்வையிட அழுத்தவும்.
நோர்வேயின் தேசிய நூலகத்தில் உள்ள நோர்வே உள்ளூர் வரலாற்று நிறுவனம் (Norsk Lokalhistorisk Institutt – NLI) Lokalhistoriewiki.no எனும் இணையத்தளத்தை நிர்வகித்து வருகின்றது. «நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்» எனும் நூலில் வெளியான சில பகுதிகளை Lokalhistoriewiki.no இல் இடுகையிடுவதின் நோக்கம், நோர்வே வாழ் தமிழர்களை பங்கேற்பு எழுத்தாளர்களாக (participatory writers) ஊக்குவிப்பதாக இருந்தது. இது பங்கேற்புப் பாரம்பரியத்தை (participatory heritage) உருவாக்குவதற்கான ஒரு ஆவணமாக்கல் முறைமை ஆகும். இதன் மூலம் எழுத்தாளர்கள் கூட்டாக இணைந்து நூலில் வெளியான கட்டுரைகளில் புதிய தகவல்களைச் சேர்க்கலாம், புதுப்பிக்கலாம் அல்லது தொடர்ந்து எழுதலாம். அதோடு நோர்வே வாழ் தமிழர்களுக்கு முக்கியமாக இருக்கும் உள்ளூர் வரலாற்றைக் கூறும் புதிய கட்டுரைகளையும் இவ்வலைத்தளம் வரவேற்றது. ஆனால் நூலில் வெளியான கட்டுரைகளை Lokalhistoriewiki.no இல் இடுகை செய்ததன் நோக்கத்தை அடைய சவால் இருந்தது.
«பங்கேற்பு பாரம்பரியம் ஒரு வெளியாகக் (space) கருதப்படலாம். இதில் அறிவுப் பகிர்விற்கும் மற்றவர்களுடன் இணைந்து உருவாக்கும் நோக்கத்திற்காக தனிநபர்கள் முறையான நிறுவனங்களுக்கு வெளியே பண்பாடு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். பங்கேற்புப் பாரம்பரியம் உருவாக்குவதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபடுபவர்கள் உள்ளடக்கத்திற்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பர். மறுபுறம் செயல்முறை அல்லது தொழில்முறை நிபுணத்துவத்திற்கு குறைந்த முக்கியத்துவத்தை அளிக்க முனைவார்கள். இதனால் அவர்கள் நிபுணத்துவத்தின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, பகிரப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் செயல்படுவார்கள். இதில் கூட்டு முயற்சியானது கீழிருந்து மேல் நோக்கிய செயல்வடிவமாக இருக்கும். ஏனெனில் அவை அமைப்புகளை விட தனிநபர்களிடையேயான தொடர்புகளிலிருந்து வெளிப்படும்.» (Participatory Heritage, p. xv)
அக்காலத்தில் Lokalhistoriewiki.no இல் ஆரம்பிக்கப்பட்ட நோர்வேயிய தமிழ் செயற்திட்டம் பற்றிய தகவல் பரந்துபட்ட தமிழ் சமூகத்தை அடைந்ததா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும், உருவான சவாலுக்கு தமிழரின் பண்டைய வெளியீட்டுப் பாரம்பரியம் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய பண்பாட்டுக் காரணியாக இருக்கலாம். தமிழ் சமூகத்தில் ஆவணப்படுத்தலுக்குப் (documentation) பயன்படுத்தப்படும் மிகப் பொதுவான ஊடகம் நூல் வெளியீடு ஆகும். பொதுவாக நூல் பாரம்பரியத்தில், ஒரு உறுதியான ஊடகமாகத் திகழும் நூலின் உள்ளடக்கம் அந்த எழுத்தாளரின் உடமையாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் நவீன உலகில், ஆவணப்படுத்தல் (documentation) மற்றும் தகவல்தொடர்புக்கான (communication) ஆக்கபூர்வமான முறைகளுக்கு (creative methods) தொழில்நுட்பம் வழி வகுத்துள்ளது. இங்கே பாரம்பரியத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான குழப்பம் எழுகிறது. தனது நூலில் வெளியான கட்டுரைகளை புதுப்பிக்க அதனை எழுதிய ஆசிரியரே ஒப்புதல் அளித்திருந்தாலும், சமூகம் பின்வாங்கிய நிலையிலோ அல்லது அவரின் எழுத்தில் தலையிடுவதில் அவதானமாகவோ இருந்து வந்தது.
தமிழ் அமைப்புகளும் தனிநபர்களும் நோர்வே வாழ் தமிழ் சமூகத்தை தங்கள் நிர்வாகப் பதிவுகள், ஆண்டு மலர்கள், தமிழ் இதழ்கள், சஞ்சிகைகள், செய்தித்தாள்கள், பண்பாட்டு செயல்பாடுகளை ஒலி மற்றும் ஒளிப் பதிவுகள் செய்து மற்றும் ஏனைய ஆவணங்கள் மூலம் பதிவு செய்து வருகின்றது. அவை பெரும்பாலும் தமிழ் மொழியில் உள்ளன. என்றாலும், முறையான ஆவணக்காப்பகப்படுத்தல் (archiving), அதோடு தமிழ் மற்றும் பிரதான சமூகத்திற்கு அணுக்கம் (access) இல்லாமை என்பது ஒரு கவலைக்குரிய நிலையாக உள்ளது. எனவே வரலாற்று ஆவணங்கள் சிதறடிக்கப்பட்டு, சேதமடைந்து அல்லது இழக்கப்படுகின்றன. இச்சூழ்நிலை காரணமாக, படைப்பாளர்களுக்கும் பொதுச் சமூகத்திற்கும், வாய்மொழி வரலாறே தகவல்களுக்கான முக்கிய மற்றும் அணுகக்கூடிய ஆதார மூலமாக உள்ளது.
நோர்வேயிய தமிழர் வரலாற்றை ஒரு நூல் வடிவில் ஆவணப்படுத்தி (documenation) தமிழ் மற்றும் நோர்வேயிய மொழியில் வெளியான முதல் நூல் «நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்» ஆகும். இந்த நூல் நோர்வேயில் தமிழரின் 60 (1956-2016) ஆண்டு கால வரலாற்றை ஒரு குறிப்பிட்ட முன்னோக்கில் (perspective) பதிவு செய்துள்ளது. இந்த நூலில் பதிவு செய்யப்பட்ட தகவல்களுக்கான ஆதார மூலங்கள் மற்றும் முழுமையான தகவல்களின் பற்றாக்குறை பற்றி விமர்சிக்கப்பட்டது. இருப்பினும், இந்த நூல் நோர்வேயிய தமிழர் வரலாற்றை ஒரு நூல் வடிவில் ஆவணப்படுத்தி (documenation) பிரதான தளங்களில் கிடைக்கச் செய்வதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக உள்ளது.
நூல் ஆசிரியரின் புரிதல் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூலிற்கான செயற்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதாக ஏப்ரல் 2020ம் ஆண்டு நூல் ஆசிரியருடன் மேற்கொண்ட உரையாடலில் அவர் கூறினார். இதுவரை செய்த ஆவணப்படுத்தலை (documenation) புதுபித்து இப்பணியை தொடர தமிழ் சமூகத்தை, குறிப்பாக இளம் தலைமுறையினரை நூல் ஆசிரியர் வரவேற்றார்.
Lokalhistoriewiki.no இல் நோர்வேயிய தமிழ் செயற்திட்டம் 2020ம் ஆண்டு இலை தளிர் காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஒரு செயற்திட்டக் குழு நிறுவப்பட்டது. அக்குழு Lokalhistoriewiki.no இல் பங்கேற்பு மற்றும் முழுமையான நோர்வேயிய தமிழ் பாரம்பரியத்தை (participatory and holistic Norwegian Tamil heritage) உருவாக்கத் தூண்டும் பணியை முன்னெடுக்கின்றது.
வரலாறு தொடர்ச்சியான வளர்ச்சியில் இருக்கும். எனவே, Lokalhistoriewiki.no இல் இடும் எந்தவொரு கட்டுரையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் தொடர்ச்ரியாக இருக்கும். எவ்வாறாயினும், இந்த செயற்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதன் நோக்கம் மேல் குறிப்பிட்ட நூலில் வெளியான கட்டுரைகளை புதுப்பிப்பதற்கான ஒரு பணி மட்டும் அல்ல, மாறாக நோர்வேயிய தமிழ் சமூகத்தின் பரவலான, முழுமையான மற்றும் உண்மையான பிரதிபலிப்பை உருவாக்குவதே ஆகும். இந்த பிரதிபலிப்புக் கூட தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டி இருக்கும்.
ஒவ்வொரு புலம்பெயர் நாட்டிலும் உள்ள தமிழ் சமூகத்தின் வரலாறு வெவ்வேறு ஊடகங்கள், வடிவங்கள் மற்றும் முன்னோக்குகளில் (perspectives) ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் புலம்பெயர் தமிழ் வரலாறு நினைவில் கொள்ளப்படும். அவை இன்றைய மற்றும் எதிர்காலப் புலம்பெயர் தமிழ் தலைமுறையினருக்கு அடையாளம் மற்றும் இருப்பைக் கூறும் சான்றுகளாகும். மறுபுறம், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் வரையெல்லை /தளத்திற்கு (premises) உட்பட்டு ஆவணப்படுத்தல் மெற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். அந்த வரையெல்லை/தளம் பாதுகாப்பானதாக உணரப்பட வேண்டும். போராட்டச் சமூகமாக இருக்கும் தமிழ் சமூகத்தின் அடக்கப்பட்ட குரல்களுக்கு குரல் கொடுக்கும் ஊடகமாக இருக்க வேண்டும். அது சமூகம் சொல்ல விரும்பும் கதைகளை பிரதிபலிக்க வேண்டும்.
Lokalhistoriewiki.no ஒரு ஆவணக்காப்பகம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது விக்கி தொழில்நுட்பம் கொண்ட ஒரு விக்கிபீடியா ஆகும். ஆனால் இது நோர்வே அரச அமைப்பு நிர்வகிக்கும் ஒரு சமூக ஊடகம் ஆகும். இந்தத் தளம் நோர்வேயில் உள்ள மக்களுக்கு முக்கியமான வரலாற்று தகவல்களை கூட்டு மற்றும் பங்கேற்பு செயல்பாடுகள் மூலம் அடையாளம் காணவும், சேகரிக்கவும், பகிரவும் வழிவகுக்கின்றது. இந்த வலைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கு இருக்கும். இருப்பினும், ஒரு புதிய கட்டுரையை எழுத அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரையில் மாற்றங்களைச் செய்ய விரும்புவோர் பயனர் கணக்கை உருவாக்க வேண்டும். இதன்மூலம் அனைத்து பயனர் செயல்பாடுகளும் குறிப்பு மற்றும் கண்ணோட்ட (log and overview) நோக்கங்களுக்காக பதியப்படும். ஒரு மதிப்பீட்டாளர் குழு (team of moderators) கட்டுரைகளில் மெற்கொள்ளப்படும் செயல்பாட்டை அவதானிப்பர். எனவே தேவையற்ற மாற்றங்கள், அழித்தல் அல்லது நாசவேலைகள் ஆகியவை எளிதில் அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்படும். அடையாள அழிவுகள் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பாரிய சவாலாகும். அவர்கள் தொடர்ந்து தமது இன மற்றும் பண்பாட்டுத் தடங்களை அழிக்கும் செயல்பாட்டை எதிர்த்துப் போராடுகின்றனர். இந்த எதிர்ப்புப் போராட்டம் எண்ணிமத் தளங்களில் தொடர்கின்றது. ஆயினும்கூட, நோர்வேயிய தமிழ் வரலாற்றைப் பரப்புவதற்கான பல வழிகளில் Lokalhistoriewiki.no ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தலாம். இது நோர்வேயிய தமிழ் பாரம்பரியத்தின் ஒரு கைப்பிடி அளவை நோர்வேயிய தமிழர் வாயிலாக பிரதான சமூகத்திற்கு நேரடியாக வழங்கும் ஒரு சிறந்த நுழைவாயிலாக இருக்கும்.
இப்பணிக்கான செயற்திட்டக் குழு 2021ம் ஆண்டு கோடை காலத்தில் 17 முதல் 30 வயதிற்கு உட்பட்ட நோர்வேயிய தமிழ் இளையோருக்கு ஒரு பரவலான கோடைகால அழைப்பை விடுத்துள்ளது. இதற்கான முதல் தகவல் கூட்டம் 2021ம் ஆண்டு 08. யூலை அன்று நடாத்தப்பட்டது. அதில் 20 க்கும் மேற்பட்ட இளையோர் மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்றனர். இச்செயல்திட்டக் குழுவினர் நோர்வேயிய தமிழ் வரலாற்றை ஒரு பங்கேற்புப் பாரம்பரியமூடாக (participatory heritage) உருவாக்குவதற்கு நோர்வே வாழ் தமிழ் இளையோரை பங்கேற்பாளர்களாக வருமாறு தொடர்ச்சியான அழைப்பை விடுத்து வரவேற்கின்றனர்.
ஒரு வரலாற்றுக் கோடைகாலத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்!
நோர்வேயின் தேசிய நூலகத்தில் உள்ள Lokalhistoriewiki.no எனும் இணையத்தளத்தில் நோர்வேயிய தமிழ் செயல்திட்டம்.
உங்கள் ஓய்வு நேரத்தில் எதிர்காலத்திற்கு பயனுள்ள செயல்பாட்டில் நீங்கள் ஈடுபட விரும்புகிறீர்களா? தற்போதைய நிகழ்வுகள் எதிர்கால வரலாறு ஆகும். இந்த கோடை காலத்தில் நோர்வே வாழ் தமிழர்களின் வரலாற்றில் பங்களிக்க உங்களுக்கு நல்ல மற்றும் அரிய வாய்ப்பு கிடைக்கும். Lokalhistoriewiki.no என்ற இணையத்தளத்தில் நோர்வேயிய தமிழ் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த கட்டுரைகளை நீங்கள் எழுதலாம். உங்கள் படைப்புகளின் பிரதிபலிப்பை உடனடியாகப் பார்க்கலாம். செயல்திட்டக் குழு உங்களின் வேலைக்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும்.
நோர்வே வாழ் தமிழர்களின் வரலாற்றை கட்டுரைகளாக எழுதுவதற்கு உந்துசக்தியாக, நோர்வேயின் தேசிய நூலகத்தில் உள்ள நோர்வே உள்ளூர் வரலாற்று நிறுவனத்துடன் (Norsk Lokalhistorisk Institutt – NLI) இணைந்து, ஒரு செயற்குழு நிறுவப்பட்டுள்ளது. நோர்வேயிய தமிழர்களின் அடையாளம், பண்பாடு மற்றும் வரலாறு பற்றிய முழுமையான மற்றும் உண்மையான ஒரு பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதே இச்செயற்குழுவின் நோக்கமாகும். தமிழர் வள- மற்றும் ஆலோசனை மையம் அறக்கட்டளை (Stiftelsen Tamilsk Ressurs og Veiledning Senter – TRVS) இந்த செயற்திட்டத்தில் ஒரு வள உதவியாளர் (facilitator) பங்கைக் கொண்டுள்ளது. நோர்வே உள்ளூர் வரலாற்று நிறுவனம் (NLI) ஒரு வழிகாட்டியாக இருக்கும். NLI இன் வலைத்தளமான Lokalhistoriewiki.no, தலைமுறைகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இதில், எடுத்துக்காட்டாக, நேர்காணல் வாயிலாக பெறும் நினைவுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் லெக்சிக்கல் கட்டுரைகள் (lexical texts) எழுதலாம். செயற்திட்டக் குழு முதலில் எழுத நினைக்கும் கட்டுரைகளின் “விருப்பப்பட்டியல்” இங்கே காணலாம்:
நீங்கள் வேறு தலைப்பைப் பற்றி எழுத விரும்பினால் அல்லது வேறு பரிந்துரைகள் தர விரும்பினால், NLI யைத் தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குவோம்: nli@nb.no.
இச்செயற்திட்டம் நிறைவு பெற்ற பின்னரும், இப்பணியில் நோர்வே வாழ் தமிழர் பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும் என்று புலம்பெயர் தமிழ் ஆவணக்காப்பு ஊக்குவிக்கின்றது. அதன் ஒரு வழிமுறையாக தனிநபர்கள் தமது பொழுது போக்கு செயற்பாடாக இதனை ஏற்று செய்யலாம். நிறுவனங்கள் தமது வரலாற்றை இத்தளமூடாக நோர்வேயிய பிரதான சமூகத்திற்கு அறியப்படுத்தலாம். தமிழ் பள்ளிக்கூட ஆசிரியர்கள் தமது கல்வித் திட்டத்தில் இதனை ஒரு உள்ளூர் கற்பித்தல் பயிற்சியாக இணைக்கலாம் (local curriculum task). இவ்வாறான வழிமுறைகள் ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் இனம் காணப்பட்டு அதனை தமது உள்ளூர் கற்பித்தல் பயிற்சியாக இணைக்காலாம். இதன் மூலம் தாம் வாழும் நாட்டில் தமக்கான அடையாளம், இருப்பு மற்றும் வரலாற்றைப் பேணும் வளக்கத்தை தமிழ் சமூக மட்டத்தில் ஊக்குவிக்கலாம். அதனூடாக பிரதான சமூகத்துடனான தொடர்பாடலும் இணைவாக்கமும் பலப்படும். தமது அடையாளத்தை பொது சமூகத்திற்கு கூறும் வாய்ப்பு உருவாகும். அதன் மூலம் தன்னம்பிக்கையும் பெருமையும் இளையோரிடம் வளர்க்கலாம்.
உசாத்துணை
Participatory Heritage. (H. Roued-Cunliffe & A. Copeland, Eds.). Facet Publishing.
Umapalan, S. (2016a). Tamilenes liv og historie i Norge 1956-2016. Tamil Books Publication.
Umapalan, S. (2016b). நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள். Tamil Books Publication. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தகவல்
Norsk Lokalhistorisk Institutt – NLI
https://www.nb.no/forskning/lokalhistorie/
https://lokalhistoriewiki.no/wiki/Norsk_lokalhistorisk_institutt
தகவல் கடிதம் (2020)
https://dspora.no/2020/08/04/norway-local-history-wiki-tamil/
Information letter – Norwegian (2020)
https://dspora.no/2020/08/04/prosjekt-om-norsk-tamilsk-kultur-og-historie-pa-lokalhistoriewiki/

புதுப்பிக்கப்பட்டது│Updated: 20.07.2021